புதுதில்லி:
இணைய வழி செய்தி ஊடகமான நியூஸ்கிளிக் அலுவலகம் மற்றும் அதன் ஆசிரியர்கள், உரிமையாளர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமலாக்கத்துறையினரின் நடவடிக்கை யானது, சுதந்திரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ஊடகத்தை மிரட்டி, நசுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அப்பட்டமான முயற்சியாகும். நியூஸ்கிளிக் ஊடகம், நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டங்கள் குறித்து நம்பகமாகவும், விரிவாகவும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.இவ்வாறு சுதந்திரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஊடகத்தைத் துன்புறுத்தி, செய்திகள் எதுவும் வெளியிடாது வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, மோடி அரசாங்கத்தால் மத்திய முகமைகள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நியூஸ்கிளிக் மற்றும் அதன் நிர்வாகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. (ந.நி.)