புதுதில்லி:
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள ‘தேசிய பணமாக்கல் திட்டம்’ என்பது ஒட்டுமொத்தமாக இந்திய நாட்டையே விற்பனை செய்வதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக இந்தத் திட்டத்தை நிறுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
தேசிய பணமாக்கல் திட்டம் (என்எம்பி) என்ற பெயரில் அடுத்த நான்காண்டு காலத்திற்குள் சுமார்6லட்சம் கோடி அளவிற்கு நாட்டின் பொதுச் சொத்துக்களை, பொதுத்துறைநிறுவனங்களை விற்றுத் தீர்ப்பது என மோடி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் திங்களன்று மாலை வெளியிட்டார். ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை கள், நாட்டின் மின்சாரக் கட்ட மைப்பு, மின் உற்பத்தி நிலையங்கள்,தொலைத்தொடர்பு, தானியக் கிடங்குகள், சுரங்கங்கள், பெட்ரோலிய நிலையங்கள், இயற்கை எரிவாயு, பொதுத்துறை நிறுவனங்கள், விமானநிலையங் கள், நகர்ப்புறங்களில் குவிந்துள்ள அரசு நிலங்கள், துறைமுகங்கள் மட்டுமின்றி விளையாட்டு மைதானங்களை யும் கூட விற்றுத் தீர்ப்பதற்கான செயல்திட்டமாகவே அவரது அறிவிப்பு அமைந்திருந்தது.
இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய நாட்டை ஒட்டுமொத்தமாக விற்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. ஒன்றிய நிதி அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள தேசிய பணமாக்கல் திட்டத்தில், நமது தேசத்தின்சொத்துக்களும் பொதுக் கட்டமைப்புகளும் எப்படி சூறையாடப்பட உள்ளனஎன்பது விரிவாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இது மக்களின் செல்வங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்த மாகவும் தான்தோன்றித்தனமாகவும் சூறையாடுவதே ஆகும்.ஒரு குடும்பத்தின் அன்றாட செலவுக்காக அந்த குடும்பத்தின் பண்டபாத்திரங்களையெல்லாம் விற்றுத் தீர்ப்பது பொருளாதார அறிவுமல்ல; பொது அறிவுமல்ல. இன்றைய நிலையில் சந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ள நிலையில், மாபெரும் சொத்துக்களையெல்லாம் விற்பது என்பதுஅரசாங்கத்தின் கூட்டுக் களவாணி களுக்கு மட்டுமே பலன் அளிப்பதாகஇருக்கும்; கூட்டுக் களவாணி முத லாளித்துவத்தை பலப்படுத்துவதாக இருக்கும். எனவே நமது தேசத்தின் சொத்துக்களை சூறையாடும் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தும் வகையில் களமிறங்கிட வேண்டும் என நாட்டு மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.