புதுதில்லி:
பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமையன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி,நடைபெற்று வருகிறது. ‘பெகாசஸ்’ வேவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதி ,அமைச்சர்களை உளவு பார்த்தது குறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இப்பிரச்சனை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்படி எதிர்க்கட்சிகள் கடந்த 4 நாட்களாக நாடாளு மன்றத்தில் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்ணாவில் காங்கிரஸ், தி.மு.க, சிவசேனா எம்.பி.க்கள் பங்கேற்றனர்.