india

img

நாடாளுமன்றத்தில் விவாதமே இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுவது வேதனை அளிக்கிறது.... சிபிஎம் தலைவர் பி.ராமமூர்த்தி விவாதத்தில் பேசியது இன்றைக்கும் நீதிமன்றங்களுக்கு வழிகாட்டுகிறது....

புதுதில்லி:
சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நாடாளுமன்றத்தில் விவாதமே இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுவது வேதனை அளிக்கிறது என்று பகிரங்கமாக கூறியது, மோடி அரசின் மீதான கடும் விமர்சனமாக அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.

நாட்டின் 75வது சுதந்திர தினம் ஞாயிறன்று பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தலைநகர் தில்லியில் செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பை பார்வையிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
இதேபோல உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அவர் தமது உரையின் போது, சமீப காலமாக நாடாளுமன்றத்தில் விவாதங்களே இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவது குறித்து தனது ஆழமான வருத்தத்தையே மகிழ்ச்சியின்மையையே பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக களத்தில் நின்று மக்களை அணிதிரட்டியவர்களில் முன் வரிசையில் நின்றவர்கள் அன்றைக்கு இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களாக இருந்தவர்கள்தான் என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி ரமணா, இந்திய வழக்கறிஞர்கள் அநீதிக்கு எதிரான அந்தப் பாரம்பரியத்தை கைவிட்டுவிடக்கூடாது என்றும் வழக்கறிஞர் தொழில் என்பதை பணம் சம்பாதிப்பதற்கான தொழிலாக கருதாமல், தங்களது அறிவையும் ஆற்றலையும் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதில் வழக்கறிஞர்கள் முன்னிற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.இன்றைய சமூக, அரசியல் சூழலில் வழக்கறிஞர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றும், மக்களின் வாழ்வு வளம்பெற வழக்கறிஞர்கள் தங்களை பொதுவாழ்க்கையிலும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி ரமணா வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இதற்கு முன்பு அறிவுப்பூர்வமான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடந்தன என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, அந்த விவாதங்கள், சம்பந்தப்பட்ட சட்டங்களின் உட்பொருள் என்ன என்பதை அறிந்துகொள்ளவும், ஒரு குறிப்பிட்ட சட்டம் எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளவும் நீதிமன்றங்களுக்கு உதவின என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதை மேலும் விளக்கிய அவர், ஓர் உதாரணத்தை குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில்  தொழிற்தகராறுகள் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெற்ற போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி.ராமமூர்த்தி அந்த விவாதத்தில் பங்கேற்று மிக விரிவான முறையில் சட்டத்தைப் பற்றி உரையாற்றியதை நீதிபதி ரமணா சுட்டிக்காட்டினார்.

“எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. நாடாளுமன்றத்தில் தொழிற்தகராறுகள் மசோதா சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில் நடைபெற்ற விவாதத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பி.ராமமூர்த்தி அந்த விவாதத்தில் பங்கேற்று மிக விரிவான முறையில் பங்கேற்றார். இந்த சட்டம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை அது எந்தவிதத்தில் எல்லாம் பாதிக்கும் என்பதைப் பற்றியெல்லாம் அவர் விளக்கினார். இதேபோன்று பல சட்டங்கள் விரிவான முறையில் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. அந்த விவாதக் குறிப்புகளே, இந்த சட்டங்களைப் பற்றி ஆய்வு செய்கிற போதும் அவற்றின் வரம்பு எல்லை குறித்து பேசுகிற போதும் நீதிமன்றங்களுக்கு பெரும் சுமை இல்லாமல் உதவி செய்யக்கூடியவையாக இருந்தன; அதேபோல இந்த சட்டங்கள் எந்தத் தன்மையில் அமலாக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஒரு தெளிவான சித்திரத்தை அழிக்கக்கூடியவையாக, அந்த சட்டம் பற்றி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஆற்றிய விவாதங்களும் உரைகளும் அமைந்திருந்தன” என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார். 
அதேவேளையில் தற்போது, போதுமான  விவாதங்கள் இல்லாமல் அவசர கதியில் சட்டங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து அவர், மிகவும் வேதனை வெளியிட்டார். 
“ஆனால் இப்போது, மிகவும் மோசமான ஒரு நிலை நிலவுகிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிற சட்டங்கள் பெரிய அளவிற்கு போதமை கொண்டவையாக, நிறைய இடைவெளிகள் கொண்டவையாக இருக்கின்றன. இந்த சட்டங்களைப் பற்றி ஒரு தெளிவு இல்லை. என்ன நோக்கத்திற்காக இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன என்பது நமக்குத் தெரியவில்லை. என்ன விளைவுகளை இந்த சட்டங்கள் ஏற்படுத்தப்போகின்றன என்பதும் புரியவில்லை. இது மிகப்பெரிய அளவிற்கு பொது நலனை பாதிக்கிறது; குழப்பமான ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறது; இது அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்” என்று நீதிபதி ரமணா விமர்சித்தார். 

“நாடாளுமன்ற அவைகளில் அறிவுஜீவிகளும், வழக்கறிஞர்களும் இல்லாத நிலையில் அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது. இது தொடர்பாக மேலும் பேசுவதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் ஒன்றை உறுதியாகச் சொல்வேன், இது சமூக வாழ்விலும் பொது வாழ்விலும் இந்தியாவின் சட்டசமூகம் தலைமையேற்க வேண்டிய ஒரு தருணம்” என்றும் தலைமை நீதிபதி ரமணா கூறினார்.நாடாளுமன்றத்தில் சமீப ஆண்டுகளாக கொண்டுவரப்படும் மசோதாக்கள் போதுமான விவாதங்கள் இல்லாமல், நாடாளுமன்ற தெரிவுக்குழுக்கள் மற்றும் நிலைக்குழுக்களின் ஆய்வுக்கே கொண்டுசெல்லப்படாமல் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டு வரும் பின்னணியில் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கடுமையான விமர்சன கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால்நேரு, சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவர்களின் மகத்தான பங்களிப்பைப் பற்றி சுட்டிக்காட்டிய நீதிபதி ரமணா, இவர்கள் அனைவரும் வழக்கறிஞர்கள் என்றும், இவர்கள் நாட்டிற்காக தங்களது தொழிலை தியாகம் செய்தார்கள்; தொழிலை மட்டுமல்ல, சொத்துக்களையும், குடும்பங்களையும் கூட தியாகம் செய்தார்கள் என்றும் உணர்ச்சிப் பெருக்குடன் குறிப்பிட்டார். 

“எனவே இதைப்பற்றியெல்லாம் இந்திய நாட்டின் வழக்கறிஞர் சமூகம் எண்ணிப் பார்க்க வேண்டும், நாம் பொது வாழ்வில் செயலூக்கத்துடன் பங்கேற்க வேண்டும், நாட்டின் நன்மைக்காக சில நல்ல சேவைகளை நாம் செய்தாக வேண்டும்” என்றும் தலைமை நீதிபதி அழைப்பு விடுத்தார்.