புதுதில்லி:
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவாதம் இல்லாமல் சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன. பெகாசஸ் குறித்துவிவாதிக்கக்கோரி ஜூலை 28 புதன்கிழமையன்று இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.புதனன்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்களுக்கிடையே கேள்வி நேரம் நடத்தப்பட்டது. ‘மாலையில் மாநிலங்களவையில் இளம் சிறார் திருத்தச்சட்டமுன்வடிவின் மீது ஒன்றிய பெண்கள்- குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசிய பின்னர் விவாதம் எதுவும் இன்றி சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக உறுப்பினர்கள் பெகாசஸ் விவகாரம் குறித்துவிவாதம் நடத்த வேண்டும் என்று தமிழில் முழக்கமிட்டனர். இது ஆளும்கட்சி உறுப்பினர்களை ஸ்தம்பிக்க வைத்தது. பின்னர் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
மக்களவை
மக்களவையில் சபாநாயகர்எதிர்க்கட்சியினரின் முழக்கங்களுக்கு இடையே அவையை நடத்திவிட வேண்டும் என்ற பிடிவாதத்துடன் கேள்வி நேரத்தை நடத்தி முடித்தார். பெகாசஸ் குறித்து விவாதம் கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து அவை 12.30 வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர்அவை கூடியபோது 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மாலை கூடியதும் அவையில் திவால் சட்டத் (Insolvency and Bankruptcy Code) திருத்தங்கள் மீதான விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒன்றியநிதி இணை அமைச்சர் பகவத் கிருஷ்ணா ராவ் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தி னார். கோவிட்-19 தொற்றின் காரணமாக இந்த திருத்தங்கள் அவசியமாகின்றன என்று கூறினார். பின்னர் விவாதம் எதுவும் இன்றியே இந்தச் சட்டமுன்வடிவும் நிறைவேறியது. இதுவரை மக்களவையில் இந்தக்கூட்டத்தொடரில் விவாதம் இல்லாது இத்துடன் மூன்று சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பின்னர் 2021-22 ஆம் ஆண்டுக்கான துணை மானியக் கோரிக்கைக்கான வாக்கெடுப்புக்கும் அரசுத்தரப்பில் கோரப்பட்டது. இதுவும் விவாதம் இன்றி எடுத்துக்கொள்ளப்பட்டது. 2017-18ஆம் ஆண்டைவிட கூடுதல் மானியத்திற்கான கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. பின்னர் மக்களவை 4 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் வியாழக்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது. (ந.நி.)