india

img

ஆக்சிஜன் தட்டுப்பாடு இப்போதைக்கு தீராது... லிண்டே நிறுவன நிர்வாகி பானர்ஜி பேட்டி....

புதுதில்லி:
நாட்டில் நிலவும் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தான் சீராகும் என தகவல் வெளியாகியுள்ளது.கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளதால் தொற்றாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. தில்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜனின் தேவையும் அதிகரித்துள்ள நிலையில், அதன் பற்றாக்குறையும் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் லிண்டே பிஎல்சியின் நிர்வாகியும் தெற்காசிய எரிவாயு வணிகத் தலைவரான  மோலோய் பானர்ஜி  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாளொன்றுக்கு 7200 டன்களாக இருந்த மருத்துவ ஆக்சிஜனின் தேவை தற்போது எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. ஆயினும் ஆக்சிஜனுக்கான தேவை ஏப்ரல் 25 முதல் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளது.லிண்டே-யின் இணை நிறுவனங்களான லிண்டே இந்தியா மற்றும் பிராக்சேர் இந்தியா  மற்றும் பிற உற்பத்தியாளர்கள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை நாளொன்றுக்கு   9,000 டன்களுக்கு மேல் அதிகரிக்க உள்ளனர். கொரோனாவால் நாட்டின் மேற்கு, வடக்கு மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு ஆக்சிஜனை விரைவாக கொண்டு செல்வதற்கு உள்ள நெருக்கடிகள் வரும் வாரங்களில் சீர் செய்யப்படும்.

 ஆக்சிஜன் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 10,000- ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,  இந்த சிலிண்டர்கள் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கிராமப்புறங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பெரிய அளவில்  திரவ மருத்துவ ஆக்சிஜனைக் கொண்டு செல்வதற்கு இந்தியா சுமார் 100 கிரையோஜெனிக் கொள்கலன்களை இறக்குமதி செய்கிறது. அவற்றில் 60-ஐ லிண்டே வழங்குகிறது என்றார்.