புதுதில்லி:
“கொரோனா தொழில்முடக்கத் தால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை நூறுநாள் வேலைத்திட் டமே பாதுகாத்தது; அவர்களின் வாழ்க்கைக்கான பாதுகாப்பு வளையமாக இருந்தது” என்று குஜராத் அரசின் ஆய்வறிக்கை கூறியுள்ளது.
இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தில், ஊரகப் பகுதி வறுமையை ஒழிக்கும் நடவடிக்கையாக 2006-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஆகும்.கிராமப்புறங்களில் ஓராண்டில் 6 மாதங்களுக்கு மட்டுமே விவசாயம் சார்ந்த பணிகள் நடக்கும். அடுத்த 6 மாதங்களுக்கு வேலை இருக்காது. ஒன்று அவர்கள் அருகிலுள்ள சிறிய நகரங்களுக்கு கூலி வேலைக்குச் செல்ல வேண்டும். சில சமயங்களில் அதுவும் கிடைக்காமல் கடன் வாங் கியோ, பட்டினி கிடந்தோ வறுமையில் காலத்தைக் கழிக்க வேண்டும்.
இதனைக் கருத்தில் கொண்டுதான், கிராமப்புற மக்களுக்கு ஆண் டொன்றுக்கு நூறுநாள் வேலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம்- இடதுசாரிக் கட்சிகளின்அழுத்தம் காரணமாக கொண்டுவரப் பட்டது. ஆட்சியாளர்கள் ஆரம்பத்தில் வேண்டாவெறுப்பாகவே இத்திட் டத்தை செயல்படுத்தினர். பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல், வேலைநாட்கள் குறைப்பு, கூலி குறைப்பு போன்ற முறைகேட்டுக்கு வழிவகுத்தனர். எனினும், இடதுசாரிகள் தலைமையிலான விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் தொடர்ச்சியான தலையீடு, கிராமப்புற மக்களிடம் இத்திட்டத் திற்கு கிடைத்த வரவேற்பால் அவர்கள் பின்வாங்கினர்.
ஒரு கட்டத்தில், இந்தியாவில் செயல்படுத்தப்படும் நூறுநாள் வேலைத்திட் டம் வறுமை ஒழிப்புக்கான முன்மாதிரிதிட்டமாக உலக நாடுகளால் பாராட்டப் பட்டது. இந்த திட்டம், இந்தியாவின் கிராமப்புற மக்கள் மத்தியில் பணப்புழக் கத்தை அதிகரித்து இருப்பதுடன், ஜிடிபிவளர்ச்சிக்கும் பங்களிப்பதாக பொருளாதார ஆய்வுகள் குறிப்பிட்டன.எனினும், 2014-இல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுஆட்சிக்கு வந்த நிலையில், இத்திட் டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் இறங்கியது. பட்ஜெட் ஒதுக்கீட்டில் இதற்கான ஒதுக்கீட்டு அளவைக் குறைத்தது. இந்த திட்டம் ஒருவீணான திட்டம் என்பது போல சித்தரிக்க முயன்றது.
ஆனால், 2020 ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு, கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த கிராமங்களுக்குத் திரும்பியபோது, பட்டினிச் சாவுகளைத் தடுக்க நூறுநாள் வேலைத்திட்டத்தைத் தீவிரப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கட்டத்திற்கு ஒன்றிய பாஜக அரசு வந்தது. இத்திட்டத்திற்கு, பட்ஜெட்டில் ரூ. 40 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கப் படும் என்று அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதன்மூலம் 300 கோடி வேலைநாட்கள் கிடைக்கும் என்றார்.இந்நிலையில்தான், “கொரோனா நெருக்கடியில், மகாத்மா காந்தி ஊரக வேலையுறுதித் திட்டமே குஜராத் ஏழைகளின் வாழ்க்கைக்கான பாதுகாப்பு வளையமாக இருந்தது” என்று குஜராத்அரசு கூறியுள்ளது.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ‘குஜராத்தில் எரிசக்தி, உமிழ்வு, காலநிலை மற்றும் மேம் பாட்டு முன்னோக்குகள் மீதான கொரோனாவின் தாக்கங்கள்’ என்ற அறிக்கையை, கடந்த வாரம் முதல்வர் விஜய்ரூபானி வெளியிட்டார். ஐஐஎம் அகமதாபாத் மற்றும் ஐஐடி காந்திநகர் ஆகியவற்றுடன் இணைந்து மாநில காலநிலை மாற்றத் துறையால் தயாரிக் கப்பட்ட அந்த அறிக்கையில்தான் குஜராத் அரசு மேற்கண்டவாறு கூறியுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களில் சம்பாதித்ததை ஒப்பிடுகையில், நூறுநாள் வேலைத்திட்டத் தில் ஊதியம் குறைவுதான் (முன்பு 198 ரூபாயாக இருந்தது; தற்போது 224 ரூபாய் வழங்கப்படுகிறது) என்றாலும், கொரோனா பொதுமுடக்கத்தால் உருவான நெருக்கடி சூழ்நிலைகளில் இந்தவருமானம்தான் அவர்களைப் பாதுகாத்துள்ளது” என்று குஜராத் அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள் ளது.“தங்கள் சொந்த கிராமத்தில் வசிக்கும் சூழ்நிலையில், இந்த ஊதியம் ஓரளவுக்கு அவர்களுக்கு பிரச்சனைகளைச் சமாளிக்கக் கூடியதாக இருந்தது. உதாரணமாக பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் தஹோத் மாவட்ட கிராமங்களை எடுத்துக் கொள்ளலாம். கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, சுமார் 1 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தஹோத் தில் உள்ள தங்கள் கிராமங்களுக்குத் திரும்பினர். இவர்களுக்கு நூறுநாள் வேலைத்திட்ட வருவாய்தான் பெரிதும் கை கொடுத்தது.
தஹோத் மாவட்டத்தில் “மொத்தம்2 லட்சத்து 38 ஆயிரம் பேர், நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுகின்றனர். அதைத் தொடர்ந்து பாவ் நகர் 77 ஆயிரத்து 659 பேர்களும், நர்மதாவில் 59 ஆயிரத்து 208 பேர்களும் பணியாற்றுகின்றனர்” என்றுகூறும் அறிக்கை, “சூரத்தில் வைரம்ருகூட்டல் பிரிவுகளில் பணிபுரிந்தவர்களும் கூட ஏராளமானோர் நூறுநாள் வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளனர்; கொரோனா தொற்று பொதுமுடக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு வாழ்வாதாரத்தைத் தக்கவைக்க உதவுவதில் ஊரக வேலையுறுதித் திட்டம் நேர்மறையான பங்களிப்பை வழங்கியுள்ளது” என்று பலவாறாக பாராட்டியுள்ளது.குஜராத் மாநிலத்தின் அறிக்கை இவ்வாறு இருக்கும் நிலையில்தான், 2020-ஐக் காட்டிலும், 2021-ஆம் ஆண்டில் ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களின் எண் ணிக்கை 34 சதவிகிதம் அளவிற்குக் குறைந்திருப்பதாக புதிய புள்ளிவிவரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது 2020 மே மாதத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, 3.30 கோடி குடும்பங்கள் பயனடைந்த நிலையில், 2021 மே மாதத்திலோ அது 2.18 கோடி குடும்பங்களாகவே இருந்தது என்று அந்த புள்ளிவிவரம் கூறுகிறது.