புதுதில்லி:
விவாகரத்து பெற்ற தம்பதிகள் சேர்ந்து வாழ்வதற்கும், அவர்கள் உடல் ரீதியான உறவு வைத்துக் கொள்வதற்கும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் இந்துத் திருமணம் சட்டப்பிரிவு சரிதானா? என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள குஜராத் தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் ஒஜாஸ்வா பதாக், மாயன்க் குப்தா. இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், “இந்துத் திருமண சட்டத்தின் பிரிவு 9, சிறப்பு திருமணச் சட்டத்தின் 22-ஆவது பிரிவு செல்லுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.“ஏனெனில், இந்த சட்டங்கள் பிரிந்து சென்ற தம்பதியரை சேர்ந்து வாழவும், கட்டாய பாலியல் உறவு கொள்ளவும் உத்தரவிடும் அதிகாரத்தை நீதிமன்றத்துக்கு வழங்கி உள்ளது” என்று கூறியிருந்தனர். திருமணமாகி தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படும் வெறுப்பு காரணமாகவே தம்பதிகள் நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து பெறுகின்றனர். இந்நிலையில், அவர்களை சேர்ந்து வாழ நிர்ப்பந்திக்கும் சட்டப்பிரிவு சரிதானா? என்று கேட்டிருந்தனர். இது அரசியல் சட்டப்பிரிவு 21-க்கு எதிராகவும் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.இந்த வழக்கு நீதிபதி ஆர்.எப். நாரிமன், நீதிபதி கே.எம். ஜோசப் மற்றும் நீதிபதி பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “திருமணச் சட்டம் செல்லுபடியாகுமா? என்று கேள்வி எழுப்பப்பட்ட மனுக்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக பட்டியலிடப்பட்டு ஜூலை 22-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்” என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த மனுக்களுக்கு ஒன்றிய அரசு 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்’’என்றும் உத்தரவு பிறப்பித்துஉள்ளனர்.