புதுதில்லி:
கொரோனா தொற்று அபாயத்தை கவனத்தில் கொள்ளாமல், 5 மாநிலத் தேர்தலை நடத்தியதற்காக, தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் கூட சுமத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இது ஊடகங்களில் முக்கிய விவாதமாகவும் மாறியது.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றநீதிபதிகளின் இந்த கருத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்ற தேர்தல்ஆணையம், வழக்கு விசாரணை களின் போது நீதிபதிகள் கூறும் வாய்மொழி கருத்துக்களை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், இந்த வழக்கில், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆா். ஷா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு வியாழனன்று தீர்ப்பளித்தது. அதில், வழக்கு விசாரணைகளின் போது, நீதிபதிகள் கருத்துக் கூறுவதற்கோ, அதனை ஊடகங்கள் செய்தியாக வெளி யிடுவதற்கோ தடை விதிக்க முடியாதுஎன்று தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
கருத்துரிமை என்பது நீதிமன்றங் களில் நடைபெறும் விசாரணைகள் குறித்து செய்தி சேகரிப்பதையும் உள்ளடக்கியதே. எனவே நீதிமன்ற விசாரணை நடைமுறைகளைச் செய்தி ஆக்கக்கூடாது என்று ஊடகங்களுக்குக் கூற முடியாது.புதிய தொழில்நுட்பம் மூலம் விரைவாக உடனுக்குடன் செய்திகளை வெளியிடுவது, பிரசுரிப்பது என்பது ஊடகப் பேச்சு மற்றும் கருத்துரிமையின் ஒரு பகுதியே ஆகும். எனவே, தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் செய்தி சேகரிப்பது, வெளியிடுவது தொடர்பாக ஊடகங்கள் மீது குறை கூறுவதற்குப் பதில் தங்களது செயல்பாடுகளைத்தான் மேம்படுத்த வேண்டும்.தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் கூட சுமத்தலாம் எனச் சென்னை உயர் நீதிமன்றம் கூறியது கடுமையானதுதான். ஆனால்,ஒரு வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கருத்துகளைக் கூறுவது என்பது சம்பந்தப்பட்ட விவகாரங் களில் ஒரு தீர்வை எட்டுவதற்காகத் தான். அதேவேளையில் கருத்துகள் அனைத்தும் தீர்ப்பு எழுதும்போது அதில் பிரதிபலிப்பதில்லை என்பதைக்கணக்கில் கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தலாம் என்ற கருத்தைத் தீர்ப்பில் குறிப்பிட வில்லை. எனவே, அந்தக் குற்றச்சாட்டை ரத்து செய்ய வேண்டும்என்று மேல்முறையீட்டு மனுவில் தேர்தல் ஆணையம் கூற எந்தவித முகாந்திரமும் இல்லை.நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்படும் கருத்துகளை ஊடகங்கள் செய்தியாக்குவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் கோரியதிலும் எவ்வித சாரமும் இல்லை. எனவே, நீதிபதிகள் கருத்துக் கூறுவதற்கும், நீதிபதிகளின் கருத்துகளை ஊடகங்கள் செய்தியாக்குவதற்கும் தடை விதிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.