புதுதில்லி:
கடந்த சில ஆண்டுகளாக,சாதிவாரிக் கணக்கெடுப்புக் கான கோரிக்கை மீண்டும் வலுப்பெறத் துவங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் பலவும் இந்தக் கோரிக்கையை எழுப்பி வருகின்றன.ஆனால், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரைத்தவிர, மற்றவர்களுக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப் படாது என்று ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், கடந்த மாதம்நாடாளுமன்றத்தில் தெரிவித் தார். எனினும், பீகாரைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் அண்மையில் பிரதமர் மோடியைச் சந்தித்து, நேரிலேயே சாதிவாரிக் கணக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்நிலையில்தான், மறைந்த பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சராக இருந்தவருமான அருண் ஜெட்லி, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முன்புஎழுத்துப்பூர்வமாக உறுதியளித்து இருப்பதை பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரியஜனதாதளம் தலைவருமான லாலு பிரசாத் நினைவுபடுத்தியுள்ளார்.“முந்தைய காலங்களில்சாதிவாரி கணக்கெடுப்புக்காக நான் தீவிரமாக போராடினேன்.முலாயம் சிங், சரத் யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும், இந்த கோரிக்கையை முன்வைத்தனர். அப் போது, ஒன்றிய அமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜெட்லி, ‘சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என, எங்களிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தார். அதன்படி இப்போது சாதிவாரிகணக்கெடுப்பு நடைபெறும் என நம்பிக்கையுடன் உள்ளோம். அது நடந்தால் மட்டுமே, மக்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதார நிலை உள்ளிட்ட அனைத்துதகவல்களையும் பெற முடியும்; அதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற் கொள்ள வேண்டும்” என்று லாலு பிரசாத் கூறியுள்ளார்.