புதுதில்லி:
நாடாளுமன்றத்தின் இரண்டு மாத கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29 ஆம் தேதி தொடங்குகிறது என்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றும் செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்ற விவகாரத்துறை அறிவித்தது.
2021ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். பிப்ரவரி 1 ஆம் தேதியன்று மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட் அமர்வின் முதல் பகுதி ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகக்குழு அறிவித்துள்ளது.