மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட்டை முதல்வர் பழனிசாமி அவர்களும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர்களும் தனித்தனி அறிக்கைகளில் வரவேற்றுள்ளனர். சமீபத்தில் தமிழகம் வந்த பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, சட்டமன்ற தேர்தலுக்கு அ.இ.அ.தி.மு.க.வுடனான கூட்டணி உறுதி செய்துள்ள சூழலில் வேறு எதனை “இரட்டை தலைமையிடமிருந்து” தமிழக மக்கள் எதிர்பார்க்க முடியும்? தமிழக மக்கள் உட்பட பெரும்பாலான மக்கள் இந்த பட்ஜெட்டின் மீது கடும் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ள சூழலில் முதல்வரும் துணை முதல்வரும் வரவேற்பது விந்தையானது மட்டுமல்ல; முற்றிலும் அரசியல் விசுவாசத்தை வெளிப்படுத்தும் செயலாகும்.
மானிய வெட்டுக்கள்
மத்திய அரசாங்கம் மக்களுக்கு நலன் பயக்கும் ஏராளமான நிதி ஒதுக்கீடுகளை மானாவாரியாக குறைத்துள்ளது. நிதி அமைச்சரின் உரையில் இவை மறைக்கப்பட்டாலும் பட்ஜெட் உள் விவரங்களை ஆய்வு செய்யும் எவர் ஒருவரும் இதனை மிகத்தெளிவாக அறிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு சில:
2020-21 திருத்தப்பட்ட மதிப்பீடு / ரூ கோடி 2020-21 திருத்தப்பட்ட மதிப்பீடு / ரூ கோடி மானிய வெட்டு
உணவு மானியம் 4,22,618 2,42,836 42.5%
உர மானியம் 1,33,947 79,530 40.6%
சுகாதாரம் 82,445 74,602 9.5%
பெட்ரோல் மானியம் 38,790 12,995 66.5%
முதல்வர் பழனிசாமி தன்னை சாதாரண விவசாயிஎன அழைத்துக் கொள்கிறார். இந்தியாவிலேயே விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி நமது தமிழக முதல்வர்தான்! நமது “விவசாயி முதல்வருக்கு” உர மானியம் 40.6% குறைக்கப்பட்டது பற்றிகவலை இல்லை. ஒட்டு மொத்த விவசாயத்துக்கு 1,45,355 கோடியிலிருந்து 1,48,301 கோடி அதாவது வெறும் 2% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் கவலை இல்லை. உணவு மானியம் சுமார் 1,80,000 கோடி வெட்டப்பட்டுள்ளதும் அது தமிழகத்தையும் பாதிக்கும் என்பதும் நமது முதல்வருக்கு கவலை தரும் அம்சமாக இல்லை போலும்.எனினும் இந்த பட்ஜெட்டை முதல்வர் வரவேற்கிறார். கோவிட்19 காலத்திய சுகாதார சவாலை எதிர்கொள்ளும் சிறந்த பட்ஜெட் என்கிறார் முதல்வர். ஆனால் சுகாதாரத்திற்கு 9.5% மானியம் வெட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல; சுகாதாரம் எனும் தலைப்பின் கீழ் சாலைவசதிகளுக்காக ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள ரூ.3000 கோடியும் சேர்க்கப்பட்டுள்ள கேலிக்கூத்தும் நடந்துள்ளதை பல பொருளாதார ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர். இவையெல்லாம் நமது முதல்வர், துணை முதல்வரின் கவனத்துக்கு வராமல் போனது விந்தைதான்!
கோவிட் 19 காலத்தில் கிராமப்புற உழைப்பாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது மகாத்மா காந்தி ஊரக வலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிடைத்தபணிதான்! தமிழகத்தில் பதிவு செய்தவர்களில் 57% பேருக்குதான் பணி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழுமையாக 100 நாட்கள் பணி கிடைத்தவர்கள் வெறும் 30,000 பேர்தான்! அதாவது 0.4% மட்டுமே! டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஊதிய நிலுவை ரூ.487.60 கோடியாகும். இந்த சூழலில்தான்மத்திய அரசாங்கம் இந்த திட்டத்துக்கு 42% நிதி ஒதுக்கீடு குறைத்துள்ளது. இது பற்றி ஒருவார்த்தை கூட முதல்வரோ அல்லது துணை முதல்வரோ கூறவில்லை. இத்தகைய திட்டம் நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. தமிழக அரசாங்கம் அமைத்த ரெங்கராஜன் குழுவும் இதனை பரிந்துரைத்துள்ளது. ஆனால் மத்திய பட்ஜெட்டில் இது பரிசீலனை செய்யப்படவில்லை. தமிழக இரட்டைத் தலைமையும் இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.
தமிழக திட்டங்கள் ஏட்டுச்சுரைக்காயா?
தமிழகத்தில் 3500 கி.மீ. நீள சாலை வசதிகளுக்கு ரூ.1,03,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பட்ஜெட் உரையில் கூறியுள்ளார். இதனை மிகப்பெரிய தமிழக திட்டமாக சுட்டிக்காட்டி முதல்வரும் துணை முதல்வரும் புளங்காகிதம் அடைகின்றனர். இந்த முதலீடு 2021-22ஆம் நிதியாண்டில் முழுமையாக செய்யப்படுமா அல்லது பல ஆண்டுகளுக்கு பகுதி பகுதியாக நடக்குமா என்பதை பட்ஜெட் குறிப்பிடவில்லை. உண்மை என்ன? இந்த ஆண்டு முழுமைக்கும் இந்தியாவின் ஒட்டு மொத்த சாலைவசதிகளுக்கும் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யும் தொகை 1,98,220 கோடிதான்! இதில் தமிழகத்துக்கு மட்டும் 52% செலவு செய்வது எப்படி சாத்தியம்? ஆகவே இந்த திட்டம் நடைமுறைக்கு உண்மையிலேயே வந்தால் பணி பல ஆண்டுகள் நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு பகுதி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதே சாத்தியம்! இந்தஉண்மையை மத்திய நிதி அமைச்சர் மறைக்கிறார். முதல்வர்/துணை முதல்வரும் தமிழக மக்களிடம் மறைக்கின்றனர்.
மிகப்பெரும் போராட்டங்களை சந்தித்த சேலம் சென்னை 8 வழிச்சாலை இந்த ஆண்டு மீண்டும்தொடங்கும் எனவும் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இது ஏற்புடையதா இல்லையா என்பதுகுறித்து கருத்து எதுவும் கூறுவதை முதல்வர்/துணை முதல்வர் தத்தமது அறிக்கைகளில் தவிர்த்துள்ளனர். தேர்தல் சமயத்தில் இதனை வரவேற்கவும் முடியாது; இதனை எதிர்க்கும் தைரியமும் இவர்களுக்கு இல்லை. எனினும் குறைந்தபட்சம் முதல்வர் இந்த அறிவிப்பினால் உள்மனதில் மகிழ்ந்திருப்பார். ஏனெனில் அவர் பிடிவாதமாக ஆதரித்த திட்டம் இது! அதற்கான காரணங்களும் தமிழக மக்கள் நன்கு அறிவர்.
இதே போல சென்னை மெட்ரோ திட்டம் 118.9 கி.மீக்கு ரூ.63,246 கோடி ஒதுக்கியிருப்பதாக நிதி அமைச்சர் உரையில் குறிப்பிடுகிறார். முதல்வர்/துணைமுதல்வர் மகிழ்ச்சிக்கு இந்த அறிவிப்பும் காரணம். ஆனால் இந்த திட்டச் செலவும் முழுமையாக 2021-22 நிதியாண்டில் நடப்பது அல்ல! ஏனெனில் இந்த ஆண்டு முழுமைக்கும் சென்னை/ கொச்சி/ பெங்களூரு/ நாக்பூர் போன்ற பல நகரங்களின் மெட்ரோ திட்டங்களுக்கு சேர்த்து பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.18,998 கோடி மட்டுமே! எனவே சென்னை
திட்டத்துக்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்பதை நாமே ஊகித்து கொள்ளலாம்.
மவுனமும் கள்ள மவுனமும்!
சில முக்கிய தமிழக தேவைகள் குறித்து நிதி அமைச்சர் மவுனம் சாதித்தார். இந்த மவுனத்தை கேள்வி கேட்காமல் முதல்வரும் துணை முதல்வரும் கள்ள மவுனம் சாதிக்கின்றனர். மிக முக்கியமானது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்தது ஆகும். பிரதான் மந்திரி ஸ்வஸ்த்யா சுரக்ஷ்ணா யோஜனா திட்டத்தின் கீழ் போபால்/ புவனேஸ்வர்/ ஜோத்பூர்/ பாட்னா/ ராய்ப்பூர்/ ரிஷிகேஷ் என பல எய்ம்ஸ் மருத்துவமனைகள் குறித்து குறிப்பிடப்படுகின்றது. மேலும் உ.பி./ மேற்கு வங்கம் இன்னும் பல மாநிலங்களில் எய்ம்ஸ் குறித்து சொல்லப்படுகின்றது. ஆனால் மதுரை எய்ம்ஸ் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. இந்த ஆண்டு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? எப்பொழுது நிறைவடையும் என்பது குறித்து கனத்த மவுனம் காக்கிறது பட்ஜெட். முதல்வரும் துணை முதல்வரும் தமது அறிக்கைகளில் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தின் இரயில்வே திட்டங்கள் குறித்தும் பட்ஜெட்டில் தெளிவாக இல்லை. விஜயவாடா/இட்டார்சி/ கோரக்பூர்/சோன்நகர்/தண்குனி போன்ற பல நகரங்களை மையமாக கொண்டு பல திட்டங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட் உரை குறிப்பிடுகிறது. ஆனால் தமிழக இரயில்வே திட்டம் குறித்து எதுவும் இல்லை. முதல்வரும்/துணை முதல்வரும் ஒரு வார்த்தை எதிர்வினையாற்றவில்லை.
“நகரப் பொதுப் போக்குவரத்து அமைப்புகளின் மூலமாக 18,000 கோடி ரூபாய் செலவில் 20,000 பேருந்துகளை புதியதாக வாங்கிப் போக்குவரத்துத் துறைக்குப் புத்துணர்ச்சி ஏற்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் வரவேற்புக்குரியது” என முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். முதல்வரின் இந்த கூற்றை பார்த்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. 20,000 பேருந்துகளை 18,000 கோடி ரூபாய் செலவில் தனியார் துறையில் அமலாக்கப்படும் என நிதி அமைச்சர் குறிப்பிடுகிறார்.கிட்டத்தட்ட ஒரு பேருந்துஒரு கோடி ரூபாய் என்பதும் இந்த விவரங்கள் தெரிவிக்கின்றன. இது முற்றிலும் தனியாருக்கு சொந்தமாக இருக்கும். தனியார்தான் இயக்குவார்கள். சொகுசு பேருந்துகள் அதிக கட்டணத்துடன் இயக்கப்படும் என்பதே இதன் பொருள். தொலை தூர தடங்களில் மிகப்பெரும்பான்மையாக அரசு போக்குவரத்தை இயக்கும் தமிழகத்துக்கும் சாதாரண மக்களுக்கும் இந்த திட்டம் என்ன பலன் தரும்? அல்லது முதல்வர் போக்குவரத்து துறையில் தனியார்மயத்தை ஆதரிக்கிறாரா?
கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் வர்தா/ஒக்கி/கஜா/நிவர் போன்ற பல புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசாங்கம் நிவாரணம் கேட்டதற்கும் மத்திய அரசாங்கம் கொடுத்ததற்கும் மலைக்கும் மடுவுக்கும் வேறுபாடு உள்ளது. ஜி.எஸ்.டி. இழப்பீடு முழுமையாக தமிழகத்துக்கு கிடைக்கவில்லை. தமிழகத்தில்உள்ள பெரிய பொதுத்துறைகளான பெல் (திருச்சி/திருமயம்/இராணிப்பேட்டை ஆலைகள்)/நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மட்டுமல்லாது துப்பாக்கி தொழிற்சாலை/ ஆவடி ஆலைகள்/அரவங்காடு ஆலை ஆகியவையும் மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களும் துறைமுகங்களும் தனியாருக்கு தரப்படும் என நிதி அமைச்சரின் அறிக்கை குறிப்பிடுகிறது. முதல்வர்/துணை முதல்வர் அறிக்கைகளில் இவை பற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூட இல்லை. இரட்டைத்தலைமையின் அறிக்கைகள் கள்ள மவுனம் சாதிக்கின்றன.
கட்டுரையாளர் : அ.அன்வர் உசேன்