புதுதில்லி:
வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான இறக்குமதி வரியில் 10 சதவீதத்தை தள்ளுபடி செய்ய மத்திய அரசுமுடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 26 கோடியே 94 லட்சத்து 14 ஆயிரத்து 035 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் திங்களன்று ஒருநாளில் மட்டும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 486 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கும் விதமாக வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான 10 சதவீத இறக்குமதி வரியை தள்ளுபடி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசின் தலையீடு இன்றி தனியார் நிறுவனங்களே தடுப்பூசிகளை இறக்குமதி செய்து, வெளிச்சந்தையில் விலை வைத்து விற்பனை செய்ய அனுமதி அளிக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறினார்.மேலும் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகியோர் தங்கள் தயாரிப்புகளை இந்தியாவுக்கு விற்க அனுமதிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.