புதுதில்லி:
மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதிச்சட்டத் தின்கீழ் வேலைவாய்ப்பு அளித்திட சாதி அடிப்படையில் கணக்கெடுத்து, தலித்/பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது என்றும், இதன்மூலம் பணியிடங்களில் சாதிப்பகைமை உணர்வை ஏற்படுத்திடக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிபிஎம் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் அவசரப் பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் வாய்ப்பு நாடாளுமன்ற நடத்தை விதி 377ஆவது பிரிவின் கீழ் பி.ஆர். நடராஜனுக்குக் கிடைத்தது. அதன் பேரில் அவர் பேசியதாவது:
மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் வேலை அளித்திட, ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகம் சாதி அடிப்படையில் தரவுகள்கேட்டிருப்பதாக எனக்குத் தெரியவருகிறது. இது உருவான 2006ஆம் ஆண்டுக்குப்பின் இவ்வாறு சாதி அடிப்படையில் தரவு கோருவது இதுவே முதல்தடவையாகும். விதிகளின்படி, வயது வந்த ஒவ்வொரு குடிமகனும் வேலைகோரி வந்தால் அவருக்கு இந்தச்சட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை அளித்திட வேண்டும். அவருடைய சாதி, மதஅடையாளங்களைப்பற்றி பரிசீலனை செய்திடக்கூடாது.இதுதொடர்பாக ஒன்றை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தற்சமயம் இந்தச் சட்டத்தின்கீழ் தலித்/பழங்குடியினர் பிரிவினர் 140 கோடி மனித நாட்கள்-அதாவது 37.76 சதவீதம்-வேலையினைப் பெற்றிருக்கிறார்கள். நம் நாட்டில் தலித்/பழங்குடியினர் பிரிவினர் மக்கள் தொகை மொத்தமாக 24.4 சதவீதமாகும். இவ்வாறு அவர்கள் இந்தச்சட்டத்தின்கீழ் வேலை செய்வது அவர்கள் நாட்டின் மக்கள்தொகை சதவீதத்தை விட அதிகமாகும்.
நிலப்பிரபுக்களின் அடிமைகளாகும் நிலை வரும்
ஒன்றிய அரசு சமர்ப்பித்திடும் பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகள் மக்கள் தொகையில் தலித்/பழங்குடியினர் மக்கள்தொகை சதவீதத்திற்கு ஏற்ப அவர்களின் துணைத்திட்டங்களில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோன்று மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட் டத்தின்கீழும் துணைத்திட்டம் கொண்டுவரப்பட்டு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டால், தலித்/பழங்குடியின மக்களில் 24.4 சதவீதத்தினரே வேலை பெறமுடியும். அப்படியானால் மீதம் உள்ள 13 சதவீத மனிதநாட்களுக்கான நிதியை எங்கிருந்து பெறுவது? எனவே, துணைத்திட்டத்தின்கீழ் இந்தத் திட்டத்திற்கு நிதிஒதுக்கப்பட்டால், இப்போது வேலை செய்திடும் தலித்/பழங்குடியினர் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்திடும். விளைவு,கடந்த காலங்களில் இருந்ததைப்போன்று அவர்கள் நிலப்பிரபுக் களின் அடிமைகளாக மாற வேண் டிய நிலை ஏற்படும்.
பிற்படுத்தப்பட்ட சாதியினரும் பாதிக்கப்படுவார்கள்
மேலும் இவ்வாறு சாதி அடிப் படையில் கணக்கெடுப்பு எடுக்கப் படுவதன்மூலம் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரும் பாதிக்கப்படுவார்கள். கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் என்பது தலித்/பழங்குடியினரின் உயிர்நாடியாகும். கிராமப்புறங்களில் சாதி அடிப்படையில் வேலை ஒதுக்கீடு செய்யப்படுவது அவர்களின் சாதிய உணர்வுகளை அதிகப்படுத்திடும், இதன்மூலம் பணியிடங்களில் சாதிக்குழுக்களை அமைப்பதற்கும் இட்டுச் செல்லும். இதனால் நிலப்பிரபுத்துவ சக்திகள் தலித்/பழங்குடியினருக்கு அற்ப ஊதியம் கொடுத்து, கடுமையான வேலைகளை வாங்குவது மேலோங்கிடும். உழைக்கும் மக்கள்மத்தியில் ஒற்றுமை உணர்வுக்கு நிச்சயமாக ஊறு விளைந்திடும்.எனவே, அமைச்சர், மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் வேலை அளித்திட, தலித்/பழங்குடியினரின் உயிர்நாடியாக விளங்கும்இத்திட்டத்தின்கீழான வேலைநாட்களைக் குறைக்கக்கூடாது என்றுகேட்டுக் கொள்கிறேன். மேலும் இதுபணியிடங்களில் சாதிய உணர்வைமேலோங்கச்செய்திடும் என்பதாலும்இவ்வாறு சாதி அடிப்படையிலான தரவினைக் கோரக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கின்.இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார்.