புதுதில்லி:
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி திங்களன்று தில்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காஸிப்பூர் போராட்டத் தளங்கள் பெண் விவசாயிகளால் நிர்வகிக்கப்பட்டன. மேடை, உணவு, பாதுகாப்பை நிர்வகிப்பதில் தொடங்கிஅவர்கள் தங்களது போராட்ட அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் குறிப்பிட்டனர். ஆயிரக்கணக் கான பெண் விவசாயிகள், மாணவிகள்,ஆர்வலர்கள் என ‘விவசாய மகளிர் தினவிழா’வில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும், பயிர்களுக்கு குறைந்தபட்சஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் (எம்எஸ்பி), மின்சார மசோதாவை திரும்பப் பெறுதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 101 நாட்களாகவிவசாயிகள் போராடி வருகின்றனர்.ஆனால், இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக் காடாக மாற்றுவதில் மத்திய அரசு பிடிவாதமாகஉள்ளது. பிரச்சனைக்கு தீர்வுகாண முன்வராத மத்திய அரசு புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என வாய்ஜாலம் காட்டி வருகிறது. குடியரசு தின டிராக்டர் அணிவகுப்பில் வன்முறையைத் தூண்டி போராட்டத்தை சீர்குலைக் கும் முயற்சியும் நடந்தது. அவற்றை யெல்லாம் முறியடித்து பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிர தேசத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் நாடுமுழுவதும் உள்ள 500க்கும்மேற்பட்ட விவசாய அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கரம் கோர்த்துள்ளனர். போராட்டக்களத்தில் இதுவரை சுமார் 300 விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை,விவசாய மகளிர் தினமாக கடைப்பிடிக்க சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஒன்றுபட்ட விவசாயிகள் முன்னணி) முடிவு செய்தன. “பெண்கள், விவசாயசமூகத்தில் ஒரு பெரிய பகுதியாக உள்ளனர். ஆனால் அவர்கள் அங்கீகாரம் பெறவில்லை. உண்மையில், அவர்கள் ஆண்களை விட அதிகமாக வேலை செய்கிறார்கள்” என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் செய்தித் தொடர்பாளர் தர்ஷன்பால் தெரிவித்தார்.மகளிர் விவசாயிகள் தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசத்தின் பல்வேறுபகுதிகளைச் சேர்ந்த சுமார் 40,000 பெண்கள் தில்லியின் எல்லைகளை வந்தடைந்தனர்.பெண் போராளிகளை ஏற்றிச்செல்ல 500 பேருந்துகள், 600 சிற்றுந்துகள், 115 லாரிகள் மற்றும் 200 சிறியவாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. விவசாய மகளிர் தினத்தை கொண்டாடிவிட்டு, செவ்வாயன்று தங்கள் ஊர்களுக்கு திரும்பிச் செல்வார்கள் என்று பாரதிய கிசான் யூனியன் பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் கோக்ரிகலன் கூறினார். இதுபோன்று ஒவ்வொரு அமைப்பும் தங்களது மகளிர் அணி மூலம் பெண்களை அழைத்துவர ஏற்பாடுகள் செய்திருந்தன.
சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் செய்தித் தொடர்பாளர் தர்ஷன்பால் கூறுகையில், கர்நாடகாவில் மோடி அரசாங்கத்தை அம்பலப்படுத்தும் பிரச்சாரம் தொடங்கியுள்ளது. மகாபஞ்சாயத்துகளும் பல்வேறு மாநிலங்களில் தொடர்கின்றன என்றார். விவசாயிகளின் போராட்டம் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ஜக்மோகன் சிங்பாட்டியாலா தெரிவித்துள்ளார். பகத்சிங்கின் பிறந்தநாளில் (மார்ச் 23)ஜெய்ப்பூரில் மாபெரும் கிசான் மகாபஞ்சாயத்து நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.