நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகைப்பேரணி நடத்துவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் நிறுத்தி வைக்கப்படுவ தாக தெரிவித்தனர். எனினும், எத்தனை நாட்கள்ஆனாலும் மூன்று விவசாய சட்டங்களையும் முற்றாக ரத்து செய்யும் வரையிலும் விவசாயிகளின் போராட்டம் உறுதியாக தொடரும் என்றும் அறிவித்தனர்.
தார்மீகப் பொறுப்பேற்கிறோம்
பேட்டியின்போது ராஷ்டிரிய கிசான் மஸ்தூர் மகாசங்கத்தின் தலைவரான ஷிவ்குமார் சர்மா காக்காஜி, “டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுத்தது நாங்கள்தான், எனவே அங்கு நடந்தசம்பவங்களுக்கு நாங்களே தார்மீக பொறுப்பேற்றுக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார். “இந்த மாபெரும் இயக்கத்தில் தவறான நபர்கள்ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்த நாங்கள் தவறிவிட்டோம். எனவே அந்தத் தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்” என்றும் அவர் கூறினார்.
எனினும் டிராக்டர் பேரணிக்குள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தி வன்முறையை தூண்டிவிட்டவர்கள் மோடி - அமித்ஷா ஆகிய இரட்டையர்களால் ஏவிவிடப்பட்ட ஏஜெண்டுகள்தான் என்பதை நாங்கள் அறிவோம்; தேசிய அளவில் இந்த பேரியக்கத்திற்கு கிடைத்துள்ள மரியாதையையும், வரவேற்பையும், ஆதரவையும் சீர்குலைப்பதே அவர்களது அடிப்படை நோக்கம்என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் கூறினர்.தேசத்தின் தலைநகரில் குடியரசு தினத்தன்று நடந்த அந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான காட்சிகள், விவசாயிகளின் பேரியக்கத் திற்கு கிடைத்துவரும் ஆதரவில் ஒரு பாதிப்பைஏற்படுத்தியிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர்கள், எனினும், வரலாற்றுச் சிறப்புமிக்க டிராக்டர் பேரணிகளில் பங்கேற்றவர்களில் 99.9சதவீதம் விவசாயிகள் திட்டமிட்ட முறையிலும், அமைதியான முறையிலும் அணிவகுத்து வந்தார்கள் எனத் தெரிவித்தனர்.
பாதையிலிருந்து விலகியவர்களை தடுக்காதது ஏன்?
“விவசாயிகளின் இந்த எழுச்சிமிக்க இயக்கத்தை உடைப்பதற்கு ஏற்கெனவே மத்தியஅரசு பல சூழ்ச்சிகளையும் சதிகளையும் மேற்கொண்டது. அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இந்தப் பேரணியின்போதும் அரசாங்கம் சதி செய்தது. இந்தச் சதியும் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது” என விவசாயிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பல்பீர் சிங் ரஜேவால் குறிப்பிட்டார். ஒருகுறிப்பிட்ட பிரிவினர் திட்டமிட்ட பாதையிலிருந்து விலகிய போது காவல்துறையினர் அவர்களைதடுக்காமல் தில்லியின் மையப் பகுதிக்குள் செல்லுமாறு அனுப்பி வைத்தார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
திட்டமிட்ட பாதையிலிருந்து விலகி சில விவசாயிகளை அழைத்துச் சென்றது கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி (கேஎம்எஸ்சி) என்ற அமைப்புதான் என குறிப்பிட்ட சம்யுக்த கிசான்மோர்ச்சா தலைவர்கள் மேற்படி அமைப்பின்தலைவர் என்ற பெயரில் மோடி - அமித்ஷாவின் ஏஜெண்டான நடிகர் தீப் சித்து அத்துமீறி விவசாயிகளை திசைதிருப்பி கொண்டு சென்றது மட்டுமல்ல, வன்முறையைத் தூண்டவும் செய்தார் என்றும் குற்றம்சாட்டினர்.
மோடி - ஷாவின் கைக்கூலி
செங்கோட்டையில் நிசான் சாகிப் என்றசீக்கிய புனிதக்கொடி ஏற்றப்பட்ட சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் அந்த இடத்திலிருந்தே தீப் சித்து நேரடி ஒளிபரப்பு செய்ததுஎப்படி எனக் கேள்வி எழுப்பிய ரஜேவால், “இந்தநபர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவால் அனுப்பப்பட்ட நபர். அவர்களது கைக்கூலிதான் இவர் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன” என்றும் கூறினார். தீப் சித்து, சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் கீழ் செயல்படும் விவசாயிகள் அமைப்பின் தலைவர் போல தன்னை காட்டிக் கொண்டவர் என்றபோதிலும் அவர் பாஜகவின் கைக்கூலி என்பதுபகிரங்கமாக கடந்த இரண்டு நாட்களாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எம்.பி., சன்னி தியோலின் பிரச்சார முகவராக செயல்பட்டவர் இவர். இப்போது செங்கோட்டையில் அத்துமீறி கொடியேற்றிய சம்பவம் அம்பலப்பட்டதால், சித்துவுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று பாஜகஎம்.பி., சன்னி தியோல் கூறியிருக்கிறார் என்பதும்குறிப்பிடத்தக்கது.
காவல்துறைக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தில்லிக்கு அருகில் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் கடந்த 60 நாட்களாக முற்றுகையிட்டு அமர்ந்திருக்கும் விவசாயிகள், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் 32 சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள். இதில் கே.எம்.எஸ்.சி. சங்கம்இடம்பெறவில்லை. இந்நிலையில் காஸிப்பூர் எல்லையில் இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், குடியரசுத் தினத்திற்கு முதல்நாள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள்; சம்யுக்த கிசான்மோர்ச்சா தலைவர்கள், குடியரசு தின டிராக்டர்பேரணிக்கான அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டுச் சென்றபிறகு, மேற்படி கே.எம்.எஸ்.சி.சங்கத்தைச் சேர்ந்த சிலர் சில விவசாயிகளைகூட்டி திட்டமிட்டப் பாதையில் நாம் செல்லக்கூடாது என்று பகிரங்கமாக பேசியிருக்கிறார்கள். அது காவல்துறைக்கு தெரிந்திருக்கிறது. ஆனாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.சிங்கு எல்லையில் போராட்டம் துவங்கிய 13 நாட்களுக்கு பிறகு கே.எம்.எஸ்.சி. சங்கத்தைச் சேர்ந்த சிலர் மட்டும் வந்தார்கள்; அவர்கள் மத்திய அரசாங்கத்தின் ஏஜெண்டுகள் என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. அன்று முதல் அந்த குறிப்பிட்ட சிலர் மட்டும் சிங்கு எல்லையில் காவல்துறையினர் போட்டிருந்த தடுப்புகளுக்கு முன்பக்கம் இடம்கொடுத்து காவல்துறையினரால் அமரவைக்கப்பட்டனர். ஒட்டுமொத்த விவசாயிகளும் காவல்துறையின் தடுப்புக்கு பின்னால்தான் அமர்ந்திருக் கிறார்கள். அவ்வப்போது இந்த நபர்களை காவல்துறை அதிகாரிகள் வந்து சந்தித்துவிட்டுச் செல்வதும் வழக்கமாக இருந்தது. இதையெல்லாம் விவசாயிகளும், தலைவர்களும் கவனித்த போதிலும், அவர்கள் அரசாங்கத்தின் ஏஜெண்டுகளாக இருப்பார்கள் என்று கருதவில்லை.
ஏஜெண்டுகள் மூலம் நடத்திய காவல்துறை
இந்த விபரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்த சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள், குடியரசுத் தினத்தன்று தில்லியின்மையப்பகுதியில் நுழைந்து செங்கோட்டைக்குள்ளேயே நுழைந்து நான்கு மணி நேரம்வன்முறை நடத்தவும் கோட்டையில் ஏறி கொடிஏற்றவும் அனுமதித்தது யார் என்ற கேள்வியைஎழுப்பினர். குடியரசுத் தினத்தன்று செங்கோட்டையில் மிக மிக அதிகபட்ச பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும்போது இது எப்படி சாத்தியம்? என்றும் கேள்வி எழுப்பிய அவர்கள், இது முற்றி
லும் காவல்துறையினரால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சூழ்ச்சி என்றும் அந்த சூழ்ச்சியை தங்களது ஏஜெண்டுகள் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றும் கூறினர்.செங்கோட்டையில் பஞ்சாபியரின் புனிதக்கொடி எனப்படுகிற நிசான் சாகிப் ஏற்றப்பட்டது என்பது திட்டமிட்டு பஞ்சாப் விவசாயிகளை நாட்டு மக்கள் மத்தியில் சிறுமைப்படுத்துகிற மோடி அரசின் சதிச் செயலே என்று சம்யுக்தகிசான் மோர்ச்சாவின் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத்தும் மற்றொருவரான காக்காஜியும் கூறினர். ராகேஷ் திகாயத் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். காக்காஜி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
இப்பேரணியின்போது இந்திய தேசியக் கொடியை விவசாயிகள் அவமதித்துவிட்டதாக மோடி அரசுக்கு ஆதரவான ஊடகங்கள் கூப்பாடுபோடுகின்றன. இதுதொடர்பாக கடும் கண்டனம்தெரிவித்த கிசான் மோர்ச்சா தலைவர்கள், அணிவகுத்து வந்த ஒவ்வொரு டிராக்டர்களிலும் தேசியக்கொடிதான் பறந்தது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கூறினர்.
நகைப்புக்குரியது
இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கிசான் மோர்ச்சா தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ், சங் பரிவாரத்தைச்சேர்ந்தவர்கள் தேசத்தின் மூவண்ணக்கொடியை நாங்கள் அவமதித்துவிட்டதாக கூச்சல் போடுவது நகைப்புக்குரியது; 2002ஆம் ஆண்டு வரை அவர்கள் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடியை ஏற்றியதாகவோ, தேசியக்கொடியை மதித்ததாகவோ சரித்திரம் இல்லை எனச் சாடினார்.தில்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் விவசாயிகளின் எழுச்சிமிக்கப் போராட்டங்கள் தொடர்ந்து வீச்சுடன் நடந்து வரும் நிலையில்,உங்களால் இந்த இயக்கத்தை கட்டுக்கோப்பு டன் இனியும் நடத்திச் செல்ல முடியுமா என்றசெய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் நிச்சயம் முடி
யும் என்றும், இந்த தலைவர்கள்தான், குடியரசுத்தின டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையை நோக்கி ஒரு கும்பல் அத்துமீறி சென்றுவன்முறைக்கு வித்திட்டுவிட்டது என்ற தகவல்கிடைத்தவுடனே ஒட்டுமொத்த டிராக்டர்களையும் ஆங்காங்கே நிறுத்தி திரும்ப சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளுக்கு செல்லுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்கள் என்றும் அதைஏற்று விவசாயிகள் உடனடியாக திரும்பினார்கள் என்றும் தெரிவித்தனர்.
சிங்கு எல்லையிலிருந்து அனிதா ஜோசுவா அளித்த விபரங்களுடன்...
***************************
பாஜகவின் சதிகளை முறியடித்து முன்னேறுவோம்!
குடியரசுத் தினத்தன்று நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க டிராக்டர் அணிவகுப்பில் பங்கேற்ற கோடானுகோடி விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் பாராட்டுகிறது. தேசத்தின் தலைநகரைச் சுற்றி லட்சக்கணக்கான டிராக்டர்களிலும், இதர வாகனங்களிலும் தேசியக் கொடியை ஏந்திய வாறும் தேசிய கீதத்தை பாடியவாறும் தியாகிகளின் பெயர்களை முழங்கியவாறும் விவசாயிகள் வலம் வந்தனர். 1947 ஆகஸ்ட் 15க்குப்பிறகு முதல் முறையாக இந்திய விவசாயிகளால் தலைமை தாங்கப்பட்டு மிகப்பெரும் எண்ணிக்கையிலான இந்திய குடிமக்கள் சுதந்திரத் தினத்தை இப்போதுதான் கொண்டாடி இருக்கிறார்கள் என்று கூறலாம். இந்த அணி வகுப்பு வடக்கில் காஷ்மீர் முதல் தெற்கில் கன்னியாகுமரி வரையிலும்; மேற்கில் குஜராத் முதல் கிழக்கில் திரிபுரா வரையிலும் மிகப்பெரும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. விவசாயிகளின் இயக்கமாக துவங்கியது இன்றைக்கு அவர்களோடு தொழிலாளர் வர்க்கமும், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு மக்களும் ஊக்கத்துடன் பங்கேற்றுள்ள மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.
அமைதியான இந்தப் பெரும் போராட்டத்தை சீர்குலைக்க பாஜக அரசாங்கமும், ஆளும் வர்க்கங்களும் முயற்சித்து வருகின்றன. ஆத்திரமூட்டல்களை செய்வதும், பொய்களைப் பரப்புவதும் என கார்ப்பரேட் ஊடகங்களும் சங் பரிவாரக் காவிக் கும்பல்களும் இழிநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 மாதகாலப் போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர்கள் பறிபோனபோது கள்ள மவுனம் காத்த கார்ப்பரேட் ஊடகங்கள், இப்போது பாஜகவின் சூழ்ச்சியை அரங்கேற்றும் விதத்தில் விவசாயிகள் இயக்கத்தை இழிவுபடுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அரசாங்கத்தின் கைக்கூலிகளாக செயல்பட்ட ஒரு குழுவினரை அடையாளம் கண்டு இப்போது தனிமைப்படுத்தியிருக்கிறோம். இவர்களது சூழ்ச்சிகளையும் சதிகளையும் நிராகரித்து இந்திய நாட்டின் மக்கள் விவசாயிகளுக்கு தொடர்ந்து பேராதரவை அளிப்பார்கள் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் உறுதியுடன் நம்புகிறது.
அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து...