india

img

கொரோனாவால் நாட்டில் வேலையிழப்பே ஏற்படவில்லையா..? பல்கலைக்கழக ஆய்வுகளுடன் முரண்படும் இபிஎப்ஓ தகவல்கள்..

புதுதில்லி:
கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்ட வேலை இழப்பு பற்றிய உண்மையான தரவுகள் கொண்ட அறிக்கையைத் தயாரிக்குமாறும், இதுதொடர்பாக நம்பகமான நிறுவனங்களின் தரவுகளை சரிபார்க்குமாறும் ஒன்றியதொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தை நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல், நாட்டின் வேலைவாய்ப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2020 மார்ச்சில் துவங்கிய மிகத் தீவிரமான கொரோனா தொற்றுப் பரவலைக்கட்டுப்படுத்த, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளால் பொருளாதார நடவடிக்கைகள் மந்தமாகின.ஆனால், கொரோனா தொற்றுப் பாதிப்பு இருந்தபோதிலும், 2020-21 ஆம் ஆண்டிற்கான இபிஎப்ஓ உறுப்பினர் சேர்க்கை 77 லட்சத்து 08 ஆயிரமாக இருந்துள்ளது. இது கிட்டத்தட்ட 2019-20 ஆண்டின் உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கையான 78 லட்சத்து 58 ஆயிரத்திற்கு இணையாக இருப்பதால், நாடாளுமன்ற நிலைக் குழு சந்தேகம் எழுப்பியுள்ளது.தொழிலாளா் விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தனது 25-ஆவது அறிக்கையை நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்தது. அதில் இதனைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளது. 2019-20 மற்றும் 2020-21 ஆகிய இரண்டாண்டுகளிலும், இபிஎப்ஓ அமைப்பில் இணைந்த புதிய தொழிலாளா்களின் எண்ணிக்கை ஏறக்குறைய சமமாகவே இருந்துள்ளது. ஆனால், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 2020-ஆம் ஆண்டின் பிற்பாதியில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அமைப்புசார் தொழில்களில் இருந்த சுமார் பாதித் தொழிலாளா்கள் வேலையிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களில் சுமார் 30 சதவிகிதம் போ் சுயதொழில் தொடங்கினர். 10 சதவிகிதம் போ் தினக்கூலிகளாக மாறினர். 9 சதவிகிதம் போ் அமைப்புசாரா தொழிலாளா்களாக மாறினர் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பார்க்கையில், இபிஎப்ஓ அமைப்பின் தகவலும், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு முடிவுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன என்று கூறியிருக்கும்  நாடாளுமன்ற நிலைக்குழு, கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட வேலையிழப்பு பற்றிய உண்மையான நிலவரம் குறித்த தனி அறிக்கையைத் தயாரிப்பதுடன், நம்பத் தகுந்த நிறுவனங்களால் நடத்தப்பட்ட தரவுகள் மற்றும் ஆய்வுகளை வைத்து அதனைச் சரிபார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.