புதுதில்லி:
சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசியைவிட பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் விலை அதிகமாக இருக்கிறது. மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.600க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200க்கும் விற்பனை செய்யப்படும். மத்தியஅரசுக்கு கோவாக்சின் மருந்து ஒரு டோஸ் ரூ.150 விலையில் வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எம் இலா தெரிவித்துள்ளார்.இதுவரை கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மட்டுமே வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த நிலையில், இனிமேல் தனியார் மருத்துவமனைகள், மாநில அரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம் என்று தெரிவித்திருந்தது.
கோவிஷீல்ட் விலை
இதையடுத்து கோவிஷீல்ட் தயாரிக்கும் சீரம் நிறுவனம் தனது விலை விவரத்தை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் “வெளிச்சந்தையில் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 (2டோஸ்) ஆகவும், மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு விலையை நிர்ணயித்துள்ளது.
கோவாக்சின் விலை
இந்நிலையில் ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்சின் மருந்துக்கான விலையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எம் இலா வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மத்திய அரசுக்கு நாங்கள் அளிக்கும் தடுப்பூசி சப்ளை தவிர்த்து கூடுதலாக 50 சதவீதத்தை மாநில அசுகளுக்கு வழங்க விரும்புகிறோம். வெளிநாடுகளுக்கு 15 முதல் 20 டாலர்களாக விலை நிர்ணயித்துள்ளோம். இந்தியாவில் மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 ஆகவும், தனியாருக்கு ரூ.1200 ஆகவும் நிர்ணயித்துள்ளோம்’’ எனத் தெரிவி்த்தார்.
அதிகம் கோவிஷீல்ட்
இந்தியாவில் இதுவரை 12.76 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதில் 90 சதவீதம் பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசிதான் செலுத்தப்பட்டுள்ளது என மத்தியஅரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே கரோனா நோயாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன், அது தொடர்பான கருவிகள், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி ஆகியவற்றுக்கு சுங்க வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.