புதுதில்லி:
பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனெனில், கொரோனா வைரஸ் இன்னும் நம்முடன்தான் இருக்கிறது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சித் திட்டத்தைப் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மோடி கூறியதாவது:-
மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் இன்னும் நம்முடன்தான் இருக்கிறது. அது உருமாற்றம் அடைய வாய்ப்புள்ளது. ஜூன் 21-ஆம் தேதி முதல் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாகச் செலுத்துவதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது. இன்னும் கூடுதலான சவால்களைச் சந்திக்க நாடு தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை மனதில் கொண்டு ஒன்றியம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் கொரோனா முன்களப் பணியாளர்களைத் தயார் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி ஆறு விதமான பணிகளுக்கு கொரோனா பணியாளர்களைத் தயார் செய்யும். அதாவது வீட்டு சிகிச்சை உதவி, அடிப்படை சிகிச்சை உதவி, நவீன சிகிச்சை உதவி, அவசர சிகிச்சை உதவி, மாதிரிகள் சேகரிப்பு உதவி மற்றும் மருத்துவ உபகரணங்கள் உதவி ஆகியவை இந்தப் பயிற்சியில் தனித் தனியாகக் கற்பிக்கப்படும்.பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா 3.0 திட்டத்தின் மூலம் ரூ.276 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த சிறப்புப் பயிற்சியின் மூலம் மருத்துவத் துறை அல்லாத சுகாதாரத் துறை வல்லுநர்கள் உருவாக்கப்படுவார்கள். அவர்கள் மூலம் சுகாதாரத் துறைக்கு வருங்காலத்தில் தேவைப்படும் மனிதவளம் பூர்த்தி செய்யப்படும். இதுபோன்ற 111 மையங்கள் வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் “திறன் இந்தியா” திட்டத்தின் கீழ் தொடங்கப்படுகிறது. இதன் மூலம், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய திறமையான சுகாதார முன்னணி பணியாளர்கள் உருவாவார்கள் என்றார்.