காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு, ஜூலை 12 முதல் ஜூலை 31 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.
ஆனால், தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட முடியாது என்றும், தினமும் விநாடிக்கு 8 ஆயிரம் கன அடிவீதம் மட்டுமே தண்ணீா் தர இயலும் என்றும் கா்நாடக அரசு கூறியது.
இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு அரசு, காவிரி நதிநீா் விவகாரம் தொடா்பாக, சட்டப்பேரவை கட்சிகளின் தலைவா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது. இதில் காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றியது
இந்நிலையில், வருகின்ற ஜூலை 24ஆம் தேதி தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.