புதுதில்லி:
ஒன்றிய அரசால் வழக்கு புனையப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிலரை தில்லி உயர்நீதிமன்றம் விடுவித்துத் தீர்ப்பளித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு தில்லி வன்முறை சம்பந்தமாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், சிறையில் அடைத்து வைத்துள்ள மூன்று பேரை பிணையில் விடுவித்து, தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அரசமைப்புச்சட்டத்திருத்தத்திற்கு எதிராக கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக உள்துறை அமைச்சகத்தால் வழக்கு புனையப்பட்டு, அநீதி விளைவிக்கப்பட்டதைச் சரிசெய்யும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதுதொடர்பான உத்தரவில், உயர்நீதிமன்றம், “அரசமைப்புச்சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளின் கீழ் கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீதும், அரசுக்கு எதிராகக் கருத்து கூறுபவர்களை நசுக்கிடும் விதத்திலும், அரசாங்கத்தின் மனோபாவம் இருக்குமானால், இதுபோன்ற மனோபாவம் நீடிக்குமானால் அது ஜனநாயகத்திற்கான சோகமான நாளாக இருந்திடும்,” என்றும் குறிப்பிட்டிருக்கிறது.நீதிமன்றம், அரசாங்கத்திற்கு எப்படிநடந்துகொள்ள வேண்டும் என்ற கண்ணாடியைக் காட்டியிருக்கிறது. இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக் கூறியவர்களை, தேச விரோதிகள் என்றுகூறி எண்ணற்ற வழக்குகள் புனையப்பட்டிருக்கின்றன. அவ்வாறு புனையப் பட்டு அவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின்கீழ் மிரட்டி, அச்சுறுத்தப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டிருக் கின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் தீர்ப்பைப் பாராட்டும் அதே சமயத்தில், இதன் அடிப்படையில் ஒன்றிய அரசாங்கம் தான் புனைந்துள்ள பொய் வழக்குகள் அனைத்துக்கும் பிரயோகித்து, அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.