சண்டிகர்:
மத்திய பாஜக அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, தில்லியில் 50 நாட்களைத் தாண்டி, விவசாயிகள் தங்களின் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளின் ஆவேசமிக்க போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும்கூட, 3 வேளாண் சட்டங்களும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானவைதான்.. இவற்றால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மோடி அரசின் சட்டங்களுக்கு எதிராக, முதன்முதலில் அந்த அரசின் அமைச்சரவையிலிருந்த சிரோமணி அகாலிதளத்தின் ஹர்சிம்ரத் கவுர், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பாஜக கூட்டணியிலிருந்தும் அகாலிதளம் விலகியது. இதேபோல ராஷ்ட்ரிய லோக்தந்தரிக் கட்சி தலைவரும் எம்.பி.யுமான ஹனுமன் பெனிவால், முதலில் நாடாளுமன்ற நிலைக்குழுக்களிலிருந்து விலகினார். பின்னர் அவரது கட்சியும், கூட்டணியிலிருந்தும் வெளியேறியது.ஹரியானாவில் பாஜக கூட்டணியில் இருக்கும் ஜனநாயக் ஜனதா கட்சியும், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜனநாயக் ஜனதா கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன்தான் ஹரியானாவில் பாஜக ஆட்சி நீடிக்கிறது. இல்லாவிட்டால் எப்போது வேண்டுமானாலும் அந்த ஆட்சி கவிழும். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேஜேபி தலைவர் சவுதாலாவை சரிக்கட்டி இழுத்துப் பிடித்து வைத்துள்ளார்.
என்னதான், சவுதாலா அனுசரித்துப் போனாலும், அவரது எம்எல்ஏ-க்கள் சமாதானமாகப் போவதற்குத் தயாரில்லை. தொகுதிகளுக்குச் செல்லும்போது விவசாயிகளிடமிருந்து கடும் எதிர்ப்பை அவர்கள் சந்தித்து வருகின்றனர். இதற்கு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலிலும் ஒரு முக்கிய உதாரணமாகும்.ஹரியானாவின் அம்பாலா, பஞ்ச் குலா,சோனிபட் மாநகராட்சிகளுக்கும் ரேவாரி மாவட்டத்திலுள்ள ரேவாரி, தாருஹேரோ, ரோஹ்தக் மாவட்டத்திலுள்ள சம்ப்லா மற்றும் ஹிசார் மாவட்டத்திலுள்ள உக்லானா நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், பஞ்ச்குலா மாநகராட்சியிலும், ரேவாரி நகராட்சியிலும் மட்டுமே தப்பிப்பிழைத்த பாஜக - ஜேஜேபி கூட்டணி, ஏனைய அனைத்து இடங்களிலும் அடி வாங்கியது. ஜனநாயக் ஜனதா கட்சியின் (ஜேஜேபி) கோட்டைகள் என்று கூறப்படும் உக்லானா, சம்ப்லா, தாருஷேரா ஆகிய இடங்களில்கூட தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை.
இதனால், பாஜக கூட்டணியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஜனநாயக் ஜனதா கட்சி எம்எல்ஏ-க்கள், தற்போது தங்களின் தலைமைக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.ஹரியானா அரசுக்கு ஆதரவு தெரிவித்துவந்த சுயேட்சை எம்எல்ஏ சோம்வீர் சங்வான் கடந்த வாரம் தனது ஆதரவை விலக்கிக் கொண்டதை சுட்டிக்காட்டி, இதே முடிவை ஜனநாயக் ஜனதா கட்சியும் எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ-க்கள் ஜோகிராம், ராம் குமார் கெளதம் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில்தான், பாஜக மற்றும் ஜேஜேபி கூட்டணித் தலைவர்கள், தங்கள் ஊருக்குள் நுழைவதற்கு, ஹரியானாவின் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தடை விதித்துள்ளன.
புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் வரை, பாஜக மற்றும் ஜேஜேபி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களை ஊருக்குள் விட மாட்டோம் என்று இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூடி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.இது ஹரியானாவில் பாஜக - ஜேஜேபி கூட்டணியினருக்கு மேலும் அதிர்ச்சியையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.ஜனவரி 10 அன்று, கர்னாலில் முதல்வர் மனோகர் லால் கட்டார் பங்கேற்க இருந்த ‘கிசான் மகா பஞ்சாயத்து’ ஹரியானா விவசாயிகளின் ஆவேசமிக்க கிளர்ச்சியால், ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டது. மேடையின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து, மேடையில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள், நாற்காலிகள் மற்றும் மேசைகளை சூறையாடிய விவசாயிகள், காவல்துறையினர் அமைத்த 6 சோதனைச்சாவடிகளையும் தகர்த்தெறிந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.