புதுதில்லி:
நாடாளுமன்ற கூட்டத்தொடர் திங்களன்று (ஜூலை 19) துவங்கியது.இதில் மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் பாஜக அரசு விவாதம் நடத்த முன்வராமல் இரு அவைகளையும் ஒத்திவைத்தது. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இக்கூட்டத்தொடரில் நீட் தேர்விலிருந்து விலக்கு, மேகதாது அணை, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தமிழகத்துக்கான கொரோனா தடுப்பூசி, மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு அகில இந்திய இட ஒதுக்கீடு, விவசாயிகள் பிரச்சனை, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப தமிழக எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்தனர்.மேலும் உத்தரப்பிரதேச அரசு அறிமுகம் செய்துள்ள மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா, சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமியின் மரணம், தேசத்துரோக வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்து, வேளாண் சட்டங்கள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரச்சனைகளை எழுப்ப முடிவு செய்திருந்தனர்.ஆனால் இப்பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்காமல் புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்வது என்ற பெயரில் பிரதமர் பேசினார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பிரச்சனைகளை விவாதிக்கக் கோரினர். ஆனால் இதற்கு அனுமதியளிக்காமல் அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் 2 மணிக்கு மீண்டும் சபை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். அப்போதும் நேரம் ஒதுக்காமல் மக்களவை மாலை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
3.30 மணிக்கு அவை கூடியதும் மக்களவையில், ஒட்டுக் கேட்பு புகார் தொடர்பாக ஒன்றிய மின்னணு-தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். பின்னர் செவ்வாய்க்கிழமையன்று காலை வரை அவையை ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். மாநிலங்களவையும் செவ்வாய் காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில், மழைக்காலக் கூட்டத் தொடருக்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அமைதியான முறையில், ஆக்கப்பூர்வமாக நாடாளுமன்ற விவாதங்களை நடத்த வேண்டும். அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதிலளிக்கவும் ஒன்றிய அரசு தயாராக உள்ளது என்றார். ஆனால் அவையிலோ மக்களை பிரச்சனைகளை விவாதிக்க நேரம் ஒதுக்காமல் அவையை ஒத்திவைப்பதிலேயே மோடி அரசு குறியாக இருந்தது.