புதுதில்லி:
கடந்த ஓராண்டில் இந்தியாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மட்டும் 30 ஆயிரத்து 71 பேர் என குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (National Commission for Protection of Child Rights -NCPCR) தெரிவித்துள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ள குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR) கடந்த 2020 ஏப்ரல் 1 முதல் நடப்பாண்டு ஜூன் 5 வரை 30 ஆயிரத்து 71 குழந்தைகள் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ளனர். 26 ஆயிரத்து 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். 3 ஆயிரத்து 621 பேர் அநாதைகளாக மாறியுள்ளனர். 274 குழந்தைகள் பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளனர் என்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் சுமார் 7 ஆயிரத்து 084 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 3 ஆயிரத்து 172 குழந்தைகளும், ராஜஸ்தானில் 2 ஆயிரத்து 482 குழந்தைகளும், ஹரியானாவில் 2,438 குழந்தைகளும், மத்தியப் பிரதேசத்தில் 2,243 குழந்தைகளும் ஆதரவற்றவர்களாக உள்ளனர்.ஆந்திரப் பிரதேசத்தில் 2 ஆயிரத்து 89 பேர், கேரளாவில் 2 ஆயிரத்து 2 பேர், பீகாரில் ஆயிரத்து 634 பேர் மற்றும் ஒடிசாவில் ஆயிரத்து 73 பேர் ஆதரவற்ற குழந்தைகளாக உள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஆதரவற்றவர்களாக உள்ள 7 ஆயிரத்து 84 குழந்தைகளில் 6,865 பேர் பெற்றோரை இழந்தவர்களாகவும், 217 பேர் அநாதைகளாகவும், 2 குழந்தைகள் கைவிடப்பட்டவர்களாகவும் உள்ளனர்.பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கையில் மத்தியப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. அந்த மாநிலத்தில் 226 குழந்தைகளை பெற்றோர்கள் கைவிட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களில் ஒட்டுமொத்தமாக 15 ஆயிரத்து 620 பேர் சிறுவர்கள், 14 ஆயிரத்து 447 பேர் சிறுமிகள். 4 பேர் திருநங்கைகள். இவர்களில் அதிகமானோர் (11 ஆயிரத்து 815 பேர்) 8 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 ஆயிரத்து 902 பேர். 4 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள் 5 ஆயிரத்து 107 பேர். 14 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 4 ஆயிரத்து 908 பேர். 16 வயது முதல் 18 வயது சிறுவர் சிறுமிகள் 5 ஆயிரத்து 339 பேர் ஆதரவற்றவர்களாக உள்ளனர்.
‘சிறார் நீதிச் சட்டம்- 2015 இன் கீழ் வழங்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல்’ அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்காக சில தனியார் நபர்களும் நிறுவனங்களும் தரவு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன என்ற கவலையை வெளிப்படுத்தியுள்ள குழந்தைகள் உரிமை ஆணையம், குழந்தைகளைப் பற்றிய எந்தவொரு ரகசிய தகவலும் பொது களத்தில் வைக்கப்படக்கூடாது அல்லது எந்தவொரு நபருக்கும், நிறுவனத்திற்கும் அல்லது நிறுவனத்திற்கும் வழங்கப்படக்கூடாது என்று ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழிகாட்டுதல்களையும் முன்வைத்துள்ளது.