புதுதில்லி:
கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை தொடர்ந்து மேலும் 18-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனாவுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 7 நாட்களில் 188 மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் இல்லை. அதேநேரம் 21 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களில் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லை.நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை மற்றும் செயல் திறன் மிக்கவை.
இது தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். இந்தியாவில் மேலும் 18க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தயாராகி வருகின்றன. அவை பல்வேறு கட்ட ஆய்வில் இருக்கின்றன. நாட்டிற்கு எந்த தடுப்பூசி வழங்கப்படும் என்பது குறித்து தற்போது சொல்ல முடியாது. இந்தியா சுமார் 25 நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய உள்ளது. மக்கள் தகுந்த முறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இதைத்தான் ‘உண்மையான தடுப்பூசிகளுடன் சமூக தடுப்பூசியும் முக்கியம்’ என்று கூறிவருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.