புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு ‘தப்லீக் ஜமாத்’ மாநாடுதான் காரணம் என்று சங்-பரிவாரங்கள் தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். மத்தியஅமைச்சர்கள் துவங்கி பாஜக எம்.பி.,எம்எல்ஏக்கள் மற்றும் சாதாரண தொண் டர்கள் வரை, இதனை ஒரு வேலையாகவே செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் உலகம் முழுவதுமே முஸ் லிம்கள்தான் கொரோனாவைப் பரப்பினார்கள் என்ற அளவிற்கு பிரச்சாரம் போனது.
இதனால் ஆவேசமடைந்த இஸ்லாமிய நாடுகள், ஒரு நோய்த்தொற்றை மதத்தோடு இணைத்துப் பிரச்சாரம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுபகிரங்கமாக கண்டனம் தெரிவித்தன. இது இந்தியாவுக்கு ராஜீய ரீதியில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தவே,பரிவாரங்களின் பிரச்சாரத்திற்கு மத்திய பாஜக அரசே கடிவாளம் போட்டது.இதனிடையே, “இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணம் மார்ச் மாதம் தில்லியில் நடந்த தப்லீக் ஜமாத் நிகழ்வுதான்” என்று பாஜக மாநிலங்களவை எம்.பி.யான ஜி.வி.எல். நரசிம்மராவ் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் விவகாரத்தை ஆரம்பித்தார்.
இது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால், இந்த பிரச்சனை பழையதாகி விட்டது, இந்த தலைப்பு போதும்போதும் எனும் அளவிற்கு பலமுறை விவாதிக்கப்பட்டு விட்டது. அதனை மீண்டும் மீண்டும் எழுப்புவது எனக்குவேதனையாக இருக்கிறது; இதனால் நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை எழுந்து வரும் நிலையில், அதுபற்றி பேசுவது தேவையற்றது” என்று கூறியுள்ளார். நீங்கள் பாட்டுக்கு எதையாவது பேசி, எங்களை சிக்கலில் இழுத்து விடாதீர்கள் என்ற ரீதியில் கண்டிப்பு காட்டியுள்ளார்.