புதுதில்லி:
கொரோனா நோய்த் தடுப்புக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முறையை பயன்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எழுதிய கடிதத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதிலளித்துள்ளார்.
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றைத் தடுத்திட, சீன மருத்துவ சிகிச்சை முறையான அக்குபஞ்சர் முறையையும் பயன்படுத்திக்கொள்ள பரிசீலிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அக்குபஞ்சர் சிகிச்சை முறை மருந்து,மாத்திரைகளற்ற இயற்கை சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை மூலம் மிகவும் விரைவில் நோய் குணமடைவதும் தெரிய வந்திருக்கிறது. தற்சமயம் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மனித சமூகத்தின் மத்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதனைக் குணப்படுத்திட, நம் இந்திய பாரம்பரிய மருத்துவமுறைகளை, குறிப்பாக தமிழ்நாட்டில் பொன்னூசி மருத்துவம் என்று அழைக்கப்படும் அக்குபஞ்சர் மருத்துவ முறை, மருத்துவப் பிரச்சனைகளுக்கு மிகவும் பழங்காலத்திலிருந்து பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை முறையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நம் நாட்டில் அக்குபஞ்சர் மருத்துவ சிகிச்சை முறை இன்னமும் நாடு முழுவதும் முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை. மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் மட்டுமே இதனை அங்கீகரித்திருக் கின்றன. ஆனால் மத்திய அரசின் அங்கீகாரம் இன்றி இதனை மக்களுக்குப் பயன்படுத்திட அனுமதிக்க முடியாது.தற்போது உலக சுகாதார அமைப்பு பாரம்பரிய இந்திய மருத்துவ முறையை அங்கீகரித்திருக்கிறது. தென்னிந்தியாவில் ஆராய்ச்சி மையம் அமைத்திடவும் தீர்மானித்திருக்கிறது. பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை மேம்படுத்திட நடவடிக்கைகள் எடுப்பதற்கு இது சரியானதருணமாகும். இதன் ஒரு பகுதியான அக்குபஞ்சர் மருத்துவ முறையையும் அங்கீ கரித்திடவும் இது சரியான தருணமாகும். இதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அளித்துள்ள பதிலில், அக்குபஞ்சர் சிகிச்சை முறையை நாடு முழுவதும் உபயோகப்படுத்திக் கொள்ள மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். (ந.நி.)