தைத் திருநாளை முன்னிட்டு ஊடகவியலாளர் ஏகலைவன் நடத்தும் ‘யூ டியூப்’ சேனல் ராவணா பார்வையில் கம்யூனிஸ்ட் கட்சி மீது கொடூரமான தாக்குதலை தொடுத்துள்ளார். அதில் ‘கம்யூனிஸ்ட் கட்சி எளிமையாக இருப்பதைப் போல தம்பட்டம் அடித்துக் கொள்வதாக’த் தெரிவிக்கிறார். ஜீ தமிழ் தனியார் தொலைக்காட்சி சமீபத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை அவர்களிடம் நேர்காணல் செய்தது. அப்போது கேள்விகளுக்கு பதில் அளித்த சின்னதுரை, தனக்கு கட்சி கொடுக்கும் ஊதியம் ரூ.11250 என்றும் தனது மனைவி ஆடு மாடு வளர்க்கிறார் என்றும் இந்த வருவாயைக் கொண்டே குடும்பம் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நேர்காணல், தமிழ்ச் சமூகத்தில் இப்படியும் எம்எல்ஏக்கள் - தலைவர்கள் இயங்குகிறார்களா; இது கம்யூனிஸ்ட்களால் மட்டுமே முடியும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைத்தான் ஏகலைவன் போன்றவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
எம்எல்ஏவின் 1,05,000 ஊதியத்தை கட்சி பெற்றுக் கொண்டு, அவருக்கு குறைந்தபட்ச ஊதியம் கொடுப்பது நியாயமா தர்மமா என்று ஏகலைவன் ஊளையிடுகிறார்! எம்எல்ஏவின் உதவியாளர், கார் ஓட்டுநர், அலுவலகம், போக்குவரத்து செலவுகள் இவற்றுக்கான அனைத்து செலவுகளையும் கட்சி தான் கொடுக்கிறது என்று தோழர் சின்னதுரை அதே நேர்காணலில் தெரிவித்திருப்பதை ஏகலைவன் வேண்டுமென்றே சொல்லாமல் மறைக்கிறார்! சின்னதுரை அவர்கள், எம்எல்ஏவாக தேர்வாவதற்கு முன்னதாக கட்சியின் முழு நேர ஊழியர். அவருக்கு ஏற்கனவே முழுநேர ஊழியர்களுக்கான ஊதியம் கொடுக்கப்பட்டு வந்தது. எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட பிறகும் அந்த அடிப்படையில் தான் கட்சி ஊதியம் தருகிறது.
எம்பி, எம்எல்ஏ, அமைச்சர், இப்படி தகுதி பார்த்து மார்க்சிஸ்ட் கட்சி ஊதியம் தருவதில்லை. முழு நேர ஊழியர்களுக்கான ஊதியம் கட்சியால் நிர்ணயிக்கப்பட்டு தரப்படுகிறது. முழு நேர ஊழியர்களின் வாழ்க்கை என்பது ஒரு மாபெரும் தியாக வாழ்க்கை. இத்தகைய வாழ்க்கையை வாழ்வதற்கு தங்களது குடும்ப உறுப்பினர்களையும் அதற்கு ஏற்ப புரிந்துகொள்ளச் செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள். ஊதியம் என்பதை விட கட்சியின் இலக்கு, கோட்பாடு, மக்களுக்கான அர்ப்பணிப்பு, இவைதான் பிரதானம் என்ற வகையில் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர்கள் பணி செய்கிறார்கள்.
முழு நேர ஊழியர்களின் மருத்துவம், குடும்ப உறுப்பினர்கள் கல்வி போன்றவை வாய்ப்புள்ள கட்சித் தோழர்களின் உதவியோடு தொடர்ந்து நடந்து வருகிறது. இவையெல்லாம் ஏகலைவன் போன்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சனம் செய்தால்தான் தங்களுடைய பிழைப்பு நடக்கும் என்பதால் இத்தகைய தாக்குதல்களை செய்யத் துணிகிறார்கள். காமராஜர், கக்கன் போன்றவர்கள் எளிமையாக வாழவில்லையா இவர்கள்தான் எளிமையானவர்களா என்று ஏகலைவன் அங்கலாய்க்கிறார். நிகழ்காலத்தில் எந்த ஒரு அரசியல்வாதியையும் அவரால் சொல்ல முடியவில்லை.
ஒரு நகராட்சியின் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட அடுத்த மாதத்திலேயே விலை உயர்ந்த கார்களில் பவனி வரும் இந்த சமூகத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் எளிமையாக வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை தனியார் தொலைக்காட்சி சொல்வதைக் கூட இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. - அ.பழநிசாமி