ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக்கவுன்சில் தேர்தலில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தலைமையிலான குப்கர் தீர்மான மக்கள் கூட்டணி 110 இடங்களில் வென்று,பல இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து சிதைத்தது. இதற்கு பின்னர்பல்வேறு கட்டங்களாக ஜம்மு -காஷ்மீரில்மாவட்ட வளர்ச்சிக் கவுன்சிலுக்கான தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 20 மாவட்டங்களில் தலா 14 இடங்கள் என 280 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள்ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் இணைந்துமுன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தலைமையில் குப்கர் தீர்மான மக்கள் கூட்டணியை அமைத்துள்ளனர். இந்ததேர்தலில் இக்கூட்டணி போட்டியிட்டது. மாவட்ட வளர்ச்சிக்கவுன்சில் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22அன்று நடைபெற்றது. இந்த முடிவு களின்படி குப்கர் கூட்டணி 110 இடங்களில்வெற்றி பெற்றுள்ளது. மேலும் 12 இடங்களில் முன்னணியில் உள்ளது. குப்கர் கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டுக்கட்சி 67 இடங்களிலும், மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 27 இடங்களிலும், மக்கள் மாநாட்டுக் கட்சி 8 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களிலும், ஜம்மு- காஷ்மீர் மக்கள் இயக்கம் 3 இடங்களிலும் என 110 இடங்களில் வெற்றிபெற்று, 3.94 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளன.பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முதல்முறையாக காஷ்மீரில் 3 இடங்களில் வென்றுள்ளது. சுயேச்சைகள் 57 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 6 சுயேச்சைகள் முன்னணியில் உல்ளனர். காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்று 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
உமர் அப்துல்லா கருத்து
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா கூறுகையில், பொய்கள் மற்றும் பிரச்சாரங்களை பரப்புங்கள், ஆனால் ஒருநாள் உண்மை வெளிவரும். இந்த தோல்வியின் மூலம், பாஜகஅரசு எந்த நேரத்திலும் இங்கு சட்டமன்றத் தேர்தலை நடத்தும் என்று நான்நினைக்கவில்லை. அவர்கள் ஜனநாயகத்தை நம்பியிருந்தால் அவர்கள்இப்போது தேர்தல்களை அறிவித்திருப் பார்கள் என்று தெரிவித்தார்.