india

img

விவசாயிகள் தில்லி நோக்கி வருவது தொடர்கிறது... 80 கிலோ மீட்டருக்கும் மேல் அணிவகுப்பு நீடிக்கிறது....

புதுதில்லி:
விவசாயத்தை பாதிக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, தில்லியை நோக்கிவிவசாயிகள் அணிவகுப்பு தொடர்ந்துவந்து கொண்டிருக்கிறது. சுமார் 80 கிலோமீட்டருக்கும் மேலாக அணிவகுப்பு நீண்டிருக்கிறது. மத்திய அரசு, விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ள ஆவேசத்தை உணர்ந்து, விவசாய சங்கங்களின் தலைவர்களை அழைத்துப்பேசி பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்க்க முன்வர வேண்டும் என்றும் பெயரளவில் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளை ஏமாற்றிவிடலாம் என மனதில் நினைத்துக்கொண்டிருக்கக் கூடாது என்றும் விவசாயிகள் சங்கங்கள் கூறியுள்ளன.

நாட்டில் இதுவரை நடந்துள்ள பேரணிகளைவிட இப்போது நடந்துகொண்டிருக்கும் பேரணி வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத் தில் பேரணிக்கு வந்துகொண்டிருக்கும் விவசாயிகள் மீது மாநில அரசாங்கம் காட்டுமிராண்டித்தனமாக, கொடூரமான முறையில் தாக்குதலை ஏவியிருப்பதை விவசாய சங்கங்கள் கடுமையாகக் கண்டித்துள்ளன. உத்தர்கண்ட் மாநிலத்திலிருந்து வந்துள்ள விவசாயிகள் உத்தரப் பிரதேசத்திற்கும் மேல் தில்லியை நோக்கிவர அனுமதிக்கப்படாததால், உத்தரப்பிரதேசத்திலேயே முகாமிட்டுள்ளார்கள்.

விவசாயிகள் வெறுமனே தில்லியில்தங்கியிருப்பதற்காக வரவில்லை, மாறாக கோரிக்கைகளை வென்றெடுத்துவிட்டுத்தான் திரும்புவார்கள் என்று விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்தார்கள். இந்தப் பிரதான பிரச்சனையை அரசாங்கம் ஒதுக்கித் தள்ள முடியாது. வேளாண் சட்டங்களும், மின்சாரசட்டமுன்வடிவு 2020-ம் திரும்பப் பெறும் வரை விவசாயிகள் ஓயமாட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.இப்போதும் இந்திய அரசு, இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவக்கூடியவையே என்று கூறிக்கொண்டிருப்பதைத் தொடரக்கூடிய அதே சமயத்தில், நாடு முழுவதும் விவசாயிகள் இவற்றிற்கு எதிராகத் திரண்டுகொண்டிருப்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்தச் சட்டங்கள் அரசாங்கம் கொள்முதல் செய்வதைக் கைவிட்டுவிட்டதையும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பதையும் கைவிட்டுவிட்டதையும் சுட்டிக்காட்டிய தலைவர்கள், இந்தச் சட்டங் கள் விவசாய வர்க்கத்தை முழுமையாக கம்பெனிகளின் ஒப்பந்தங்களுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றன என்றும், விவசாயிகளுக்குத் தங்கள் நிலங்கள் மீதுஇருந்து வந்த உரிமைகளைப் பறித்துக் கொண்டுவிட்டன என்றும் அவர்கள் சுயமரியாதையுடன் இதுநாள்வரை வாழ்ந்துவந்ததை இழந்துவிட்டனர் என்றும் கூறுகிறார்கள்.

ஒப்பந்த வேளாண்மையின் அனுபவம் மிகவும் பேரழிவினைத் தந்திருக்கிறது என்பதேயாகும். அது தங்களின் கடன்நிலைமையை மேலும் அதிகரித்திடும் என்பதை விவசாயிகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். தங்கள் நிலங்களை அடிமாட்டுவிலைக்கு விற்றுவிட்டு அவர்களை அப்புறப்படுத்திவிடும் என்பதை அவர்கள் நன்கு அறிந்தே இருக்கிறார்கள்.புதிய வேளாண் சட்டங்கள் பொதுவிநியோக முறையை ஒழித்துக்கட்டிவிடும், உணவு உற்பத்திச் செலவினங்கள் உயர்ந்துவிடும், கறுப்புச் சந்தை கொடிகட்டிப் பறக்கும், மற்றும் உணவுப் பாதுகாப்பு அரித்துவீழ்த்தப்படும் என்று விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் கூறுகிறார்கள்.  இந்த இயக்கம் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், இந்த அளவிற்கு விவசாயிகள் இதற்கு முன் திரண்டது இல்லைஎன்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.இப்போதாவது அரசாங்கம் உண்மைநிலையினை உணர்ந்து விவசாயிகள் மீதும் போராடும் சங்கங்கள் மீதும் அவதூறை அள்ளிவீசுவதை நிறுத்திக் கொண்டு பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்க்க முன்வர வேண்டும் என்று அவர்கள்வலியுறுத்தியுள்ளார்கள்.  (ந.நி.)

;