திருவனந்தபுரம்:
விசாரணை நோக்கத்திலிருந்து திசைமாறிச் செல்லும் மத்திய புலனாய்வு அமைப்புகள் மாநில அரசை இழிவுபடுத்த முயற்சிப்பதாக பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மாநில அரசைக் குற்றப்படுத்தும் வழிகள் தேடி நீதியோ, நியாயமோ நன்மதிப்போ இல்லாத விசாரணையைத்தான் மத்திய புலனாய்வு நிறுவனங்கள் கேரளத்தில் நடத்தி வருகின்றன. இதனைத் திருத்தவும் நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் தலையிட வேண்டும் என அவர் கடிதத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.நமது கூட்டாட்சி அமைப்பில், மத்திய நிறுவனங்களுக்கு அரசமைப்பு சாசனம் வழங்கியுள்ள அதிகாரங்களும் எல்லைகளும் உள்ளன. எது கண்டுபிடிக்கப்பட வேண்டுமோ அதிலிருந்து விலகி,அரசாங்கத்திடம் தவறு கண்டுபிடிக்க மத்திய நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை. குற்றச்சாட்டு களில் உள்ள உண்மையைக் கண்டறியும் அனைத்து உரிமையும் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு உண்டு. ஆனால், தங்கள் அதிகாரங்களுக்கு அப்பால் நகர்வது விசாரணை நிறுவனங்களின் பக்கச்சார்பற்ற தன்மையையும் நம்பகத்தன்மையையும் அழிக்கும் என்று முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சிக்கு எதிராக
விசாரணை நடத்த வேண்டியதிலிருந்து விலகிவேறு எதையேனும் கண்டுபிடிக்க முடியுமா என்று செயல்படுவது விசாரணை முகமைகளின் நம்பகத்தன்மை முற்றிலுமாக அழித்துவிடும். இது அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையூறாக இருக்கும். இது நேர்மையாகவும் கடினமாகவும் உழைக்கும் அதிகாரிகளின் மன உறுதியை இழக்கச் செய்யும். விசாரணை நிறுவனங்களின் இந்த தவறான போக்கு அரசாங்கம் எதிர்கொள்ளும் அரசமைப்பு முறையிலான கடுமையான நிர்வாகப் பிரச்சனையாகும். இதை ஒருபோதும் ஜனநாயக-கூட்டாட்சி அமைப்பில் ஏற்றுக்கொள்ள முடியாது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 2020 ஜூன் மாதம் தங்கம் கள்ளக்கடத்தல் சிக்கியது. இது தொடர்பாக ஜூலை 8 ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியதை முதல்வர் நினைவு கூர்ந்துள்ளார். நாட்டின் நிதி பாதுகாப்பை பாதிக்கும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிறுவனங்களின் திறமையான மற்றும் ஒருங்கிணைந்த விசாரணைக்கு அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரகம் தூதரகத்தின்சில முன்னாள் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் சுங்கத்துறையின் விசாரணை ஜூலை 2020 இல் தொடங்கியது.
ஐஏஎஸ் அதிகாரியும் முதல்வர் அலுவலகத்தில் முதன்மை செயலாளராகவும் இருந்தவர், குற்றம் சாட்டப்பட்டவருடன் தொடர்பு வைத்திருந்ததாக செய்திகள் வந்த உடன் விலக்கி வைக்கப்பட்டு பின்னர்இடைநீக்கம் செய்யப்பட்டார். தங்கம் கள்ளக் கடத்தலாக அனுப்பப்பட்ட காலத்திலிருந்து இறுதியாகப்பயன்படுத்தப்பட்டது வரை வழக்கின் உண்மை களை அறிய மாநில அரசு விரும்பியது. சுங்கத்துறைக்குமேலதிகமாக, என்ஐஏவும் விசாரணையைத் தொடங்கியது. பின்னர், ஜூலை 13 ஆம் தேதி அமலாக்கத்துறை இயக்குநரகமும் இ.டி-யும் செப்டம்பர் 24 அன்று சிபிஐ-யும் களமிறங்கியது.
2.5 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்கிய லைப் திட்டம்
தங்க கடத்தலில் என்ஐஏ பதிவு செய்த வழக்கின்அடிப்படையில் இ.டிவிசாரணையைத் தொடங்கி யது. ஆனால், வடக்காஞ்சேரி லைப் வீடு வழங்கும் திட்டம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு ஒப்பந்தக்காரர் கமிஷன் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு பின்னர் இ.டி-யின் விசாரணை திசை மாறியது. இந்த திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ரெட் கிரசண்ட் நிதியளித்தது. இந்த திட்டத்தை 140 வீடுகள் மற்றும் ஒரு தாய்-சேய் மருத்துவமனையின் கட்டுமானத்திற்கு தங்களது நிதியை அவர்களே நியமித்த ஒப்பந்ததாரர் மூலம் செயல்படுத்தும் திட்டம் இது. வீடற்றவர்களுக்கு வீட்டுவசதி வழங்கும் லைப்மிஷனின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப் படுகிறது. லைப் மிஷன் ஏற்கனவே 2.5 லட்சம் ஏழை மக்களுக்கு வீட்டுவசதி வழங்கியுள்ளது. ஒரு வீட்டிற்கு ரூ.4 லட்சம் செலவில் உள்ளூர் நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படுத்தும் திட்டம் இது. பயனாளியிடமிருந்து எந்த பங்களிப்பும் வசூலிக்கப்படுவதில்லை என்பது இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.2020 செப்டம்பர் 20 ஆம் தேதி லைப் மிஷன்திட்டத்திற்கு எதிராக கேரளத்தில் உள்ள ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ அளித்த புகாரைத் தொடர்ந்து, சிபிஐ 2020 செப்டம்பர் 24 அன்று எப்ஐஆர் பதிவு செய்தது. உரிய செயல்முறையைப் பின்பற்றாமல், ஆரம்ப விசாரணை நடத்தாமல் எப்ஐஆர் அவசரமாக பதிவு செய்யப்பட்டது. லைப் மிஷனில் அறியப்படாத அதிகாரிகள் குற்றவாளிகளாக இணைக்கப் பட்டனர். ஆனால், வழக்கு விசாரணையைத் தொடங்க மாநில அரசின் அனுமதி கோரவில்லை.
எப்சிஆர்ஏ விதிமீறல் குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்பு குறிப்பிட்டபடி, இது ரெட் கிரசெண்டால் நிதியளிக்கப்பட்ட ஒரு திட்ட மாகும். அவர்கள் ஒப்பந்ததாரரை தீர்மானித்தனர். ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகம் மற்றும் ஒப்பந்தக்காரருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. வீடுகள் கட்டுவது தொடர்பான நிபந்தனைகளை மட்டுமே லைப் மிஷன் தெரிவித்தது. அதுதவிர, இந்த திட்டத்தில் லைப் மிஷனுக்கு நேரடி பங்கு இல்லை. லைப் மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி தாக்கல் செய்த வழக்கில், எப்சிஆர்ஏ விதிகள் அல்லது நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட உண்மைகளின் படி எப்ஐஆரில்லைப் மிஷன் சேர்க்கப்படுவது நியாயப்படுத்தப்படவில்லை என்று கேரள உயர் நீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது. சிபிஐ விசாரணைக்கு இரண்டு மாதங்கள் தடையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.
அதிகார அத்துமீறல்
அனைத்து அதிகார வரம்புகளையும் மீறி லைப் மிஷன் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆஜர் படுத்துமாறு அமலாக்கத் துறை இயக்குநரகம் இ.டி (1) கேட்டுக் கொண்டது. அக்டோபர் 30 ஆம் தேதி வழங்கப்பட்ட சம்மனில், அனைத்து ஆவணங்களையும் மறுநாள் காலை 10 மணிக்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளைக்கூட மீறி சம்மன் அனுப்பப்பட்டது. இது தவிர, கேரள அரசின் முக்கிய திட்டங்களான கே-போன், மின்சார வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இ.டி கோரியுள்ளதை முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கேரளத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க ஆதாரமாக இருந்துவரும் கிப்பி மீதான விசாரணையை இ.டி முடுக்கி விட்டுள்ளது. மசாலா பத்திரத்தின் ஒப்புதல் குறித்த விவரங்களைக் கேட்டு இந்திய ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதினர்.
இ.டி. விசாரணையில் உள்ள முரண்பாடு களையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வங்கி லாக்கரில் கிடைத்த பணம் தங்கக் கடத்தல்காரரிடமிருந்து பெறப்பட்டதாக இ.டி முதலில் நீதிமன்றத்தில் தெரிவித்தது. கமிஷன் மூலம் ஒப்பந்தக்காரரிடமிருந்து அந்த பணம் பெறப்பட்டதாக பின்னர் தெரிவித்தது. தங்கக் கடத்தல் தொடர்பாக பயனுள்ள மற்றும் ஒருங்கிணைந்த விசாரணைகளை நடத்த வேண்டிய விசாரணை முகமைகள் அதைத்தவிர எல்லாவற்றையும் செய்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் வசதியாக தேர்வு செய்யப்பட்டு ஊடகங்களுக்கு கசிந்து விடுகின்றன. சம்மன் அனுப்பப்படும் போது, சம்பந்தப்பட்ட நபர் அதைப் பெறுவதற்கு முன்பு அது ஊடகங்களில் செய்தியாகிறது.சில விசாரணை அதிகாரிகளின் உதவியுடன், அரசாங்கத்தையும் அரசாங்கத்தை வழிநடத்து பவர்களையும் இழிவுபடுத்த திட்டமிடப்பட்ட மற்றும் தொடர்ச்சியான பிரச்சாரம் உள்ளது. ஒரு நீதிபதி முன்பு அளிக்கும் ரகசிய வாக்குமூலத்தின் உள்ளடக்கங்கள் கசிந்தது இதற்கான சான்றாகும்.ஐந்து மாதங்களுக்குப் பிறகும், தங்கத்தை அனுப்பியவரையோ அதை இறுதியாக பெற்ற வரையோ அடையாளம் காண முடியவில்லை. வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளையும் சந்தேக நபர்களையும் கைது செய்ய முடியவில்லை. இந்த பொறுப்பை நிறைவேற்றாமல், மாநில அரசின் பிம்பத்தை கெடுக்கும் வகையில் புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன என்றும் முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.