பேசும் காச்சக்காரம்மன் – 4
சென்னை போன்ற வெப்பமான நகரங்களுக்கு சென்றால் உடல் சூடாவதைப் போல ஊட்டி, கொடைக்கானல் சென்றால் உடல் குளிரால் நடுக்கம் கொள்கிறது. அதே உடலில் நோய்க் கிருமித் தொற்று வந்தால் உடலில் காய்ச்சலும், குளிரும் ஒன்றாக சேர்ந்தே வந்து விடுகிறது. இதை புரிந்து கொள்வதற்கான அறிவியலைக் கண்டறிய நாம் ஒரு கதைக்குள்ளாகச் செல்ல வேண்டும். நோய்க்கிருமி தொற்று வந்தவர்களுக்கும் ஏனையோர்களுக்குமான வித்தியாசங்களை நாம் புரிந்து கொள்ள அம்மா, அப்பா, மகள் கதாபாத்திரங்களைக் கொண்ட ‘நாமிருவர் நமக்கொருவர்’ குடும்பத்தை ஒரு உதாரணத்திற்காக எடுத்துக் கொள்வோம்.
குறுகிய இடவசதி கொண்ட, விருந்தாளி வந்தால் தெரிகிற மாதிரி கிச்சன் இருக்கக்கூடாதென்று ஒதுக்குபுறமாக இருக்கிற, சமைத்தலின் போது ஏற்படுகிற வெப்பம் சரியாகக்கூட வெளியேற காற்றோட்டத்திற்கென்று ஜன்னல் வசதியே இல்லாத, காலங்காலமாக பெண்களுக்கென்றே நேந்து விடப்பட்டிருக்கற ஒரு அக்மார்க் சமையலறையில் அம்மாக்கள் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள், இல்லையில்லை நிஜத்திலும் அப்படித்தானே இருக்கிறது. அதேசமயம் காலையில் நுழைந்தால் மாலை வேலைவிட்டு வீடு திரும்புகிற வரையில் ஏ.சி அறையிலேயே இருந்து கொண்டு அன்றாட வேலைகளைப் பார்க்கிற சராசரி இன்றைய அப்பாக்களை ஒருபுறம் எடுத்துக் கொள்வோம். மறுபுறம் தண்ணீர் வசதி, கழிப்பறை போன்ற வசதிகள் இல்லாத, நல்ல வெளிச்சமோ காற்றோட்டமோ வகுப்பறையில் சரியாக இல்லாத அரசுப் பள்ளி ஒன்றில் படிக்கிற அவர்களின் மகளுடைய சூழலையும் கொஞ்சமாக மனதில் நினைத்துக் கொள்வோம்.
கிச்சனிலிருந்து உடம்பு வியர்த்து, முகமெல்லாம் களைத்துப் போய், வழிகிற வியர்வையைத் துடைத்து துடைத்து ஈரமாகிய சேலையோடு, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி சமைத்த உணவை மேசையில் அடுக்கிவிட்டு, சாவகாசமாக கணவர் அமர்ந்து சாப்பிடுகையில் தனக்கு உடம்பு சோர்வாக இருப்பதாக, தலை வலி, தலைச் சுற்றல் என அடிக்கடி வருவதாக புகார் செய்து கொண்டிருக்கிற அம்மாவைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அதேசமயம் அன்றாடம் இதையே மனைவியர் சொல்வதைக் கேட்டுக் கேட்டுப் பழகிப்போன கணவரோ, சரி அதுக்கென்ன இப்போ? ஒரு தலைவலி மாத்திரைய வாங்கிப் போட்டுக்க வேண்டியது தானே! என்று சுலபமாக சொல்லிவிட்டு கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் அடுப்படியில் நடக்கிற சமாச்சாரமோ வேறு. அடுப்படியில் சமையல் வேலை நடக்க நடக்க வெப்பக் காற்று வெளியேறிக் கொண்டே இருக்கும். அத்தகைய வெப்பம் சரியாக வெளியேற்றப்படாத போது சமையலறையிலுள்ள எல்லா காற்றையும் சூடேற்றி அறையே கொதிக்கிற ஒரு வெந்நீர் பாத்திரத்தைப் போல உருமாறிக் கொண்டிருக்கும். பொதுவாக சமையலறையில் இருக்கிற அம்மாவின் உள் மைய வெப்பநிலை என்பது சராசரியாக 98.6°F என்றுதான் இருக்கும். ஆனால் சமையலறையின் வெப்பமோ வெப்பக் காற்றின் காரணத்தால் 98.6°F தாண்டிப் போக ஆரம்பித்திருக்கும்.
சமையலறையின் வெப்பம் அம்மாவின் உள்மைய வெப்பநிலையைத் தாண்டி செல்லும் போதுதான் உடலில் அதற்கான மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். மேட்டுப் பகுதியிலிருந்து பள்ளத்திற்கு தண்ணீர் பாய்வதைப்போல, வெப்பநிலை அதிகமாயிருக்கிற சமையலறையிலிருந்து குறைவாக இருக்கிற அம்மாவின் உடலிற்கு தோலின் வழியே வெப்பம் கடத்தப்படுகிறது. அப்படி மெதுமெதுவாக பற்ற வைத்த உடம்பு நேரம் செல்லச் செல்ல அதிகமாக சூடேறி காய்ச்சலுக்குரிய அடையாளத்தை அம்மாவானவள் பெறுகிறாள். ஆக, இப்போது உடலின் வெப்பநிலையோ உள் மைய வெப்பநிலையை விட அதிகரிக்கத் துவங்குகிறது.
இந்த சமயத்தில்தான் நாம் ஒரு முக்கியமான விசயத்தைக் கவனிக்க வேண்டும். சமையலறையின் வெப்பநிலை அதிகமாவதன் காரணமாகத்தான் அம்மாவின் உடலில் வெப்பநிலை கூடுகிறது. ஆனால் அதே சமயத்தில் அம்மாவினுடைய உள் மைய வெப்பநிலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் எப்போதும் போல 98.6°F லேயே தான் இருக்கிறது. எனவே அறையின் வெப்பத்தால் சூடேறிப்போன உடலின் உறுப்புகளையெல்லாம் தன்னுடைய உள் மைய வெப்பநிலைக்கு ஏற்ப கொண்டு வருவதற்கான வேலையை ஹைப்போதலாமஸ் செய்தால் மட்டுமே போதும். அதேசமயம் நோய்க்கிருமி தொற்று வந்தவர்களுக்கென தனது உள் மைய வெப்பநிலையை மாற்றி மாற்றி அமைத்ததைப்போல இங்கு ஹைப்போதலாமஸ் மெனக்கெடத் தேவையில்லை.
தோலின் வெப்பம் மூலமாக வெப்ப நரம்புகள் தூண்டப்பட்டு அதன் சிக்னல்களை ஹைப்போதலாமஸ் புரிந்து கொண்டவுடன் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான ஆணையை அது பிறப்பிக்கிறது. அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே என்பதைப் போல ஹைப்போதலாமஸின் உள் மைய வெப்பநிலைக்கு ஏற்பத்தான் மக்களாகிய தோல், தசை, எலும்புகள் ஏனைய உள்ளுறுப்புகள் இருக்கவும், இயங்கவும் வேண்டுமல்லவா. ஆக, அம்மாவின் உடலில் சேர்ந்த அதிகப்படியான வெப்பத்தை தோலிற்கு அடியிலுள்ள இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை அதிகிரிப்பதன் வழியே வியிர்வையாக வெளியேற்றுகிறது. இதன் காரணமாகத்தான் நீண்ட நேரமாக கிச்சனில் இருக்கிற அம்மாவுக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டுகிறது.
உடலின் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு ஆரம்ப அறிகுறிகளை ஹைப்போதலாமஸ் வெளிப்படுத்தினாலும் அம்மாக்கள் அப்போதும் கிச்சனைவிட்டு வெளியே வர மாட்டார்கள். உலை வைத்த சோறு குலைந்து போகிவிட்டால்? கொதிக்க வைத்த சாம்பார் அடி பிடித்து விட்டால்? சூடு வைத்த பால் பொங்கி அடுப்பு அணைந்து விட்டால்? என்று கிச்சனைவிட்டு அவர்கள் நகருவதில்லை. மேலும் சமையலறையில் காற்றாடி இருந்தால் சாதம், காய்கறிகள் சீக்கிரமாக வேகாது என்று காற்றாடியைக்கூட கிச்சனில் தியாகம் செய்தவர்களாக இருக்கிறார்கள். அப்புறம் எங்கே காற்றாடியை சுழல விட்டு வெப்பத்தை தணிய வைப்பது? என்னதான் கிச்சனில் உலை வைப்பதற்கு தண்ணீர் இருந்தாலும் அது நமக்கு குடிப்பதற்காகவும்தான் என்று அம்மாக்கள் நினைப்பதேயில்லை. இப்படி உடல் வெப்பத்தை குறைப்பதற்கு எந்த முயற்சியுமே எடுக்காத பட்சத்தில் அம்மாவின் உடலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விசயங்கள் விருவிருவென நடந்தேற ஆரம்பிக்கின்றன.
-தொடர்ச்சி அடுத்த வாரம்
-டாக்டர் இடங்கர் பாவலன்
idangarpavalan@gmail.com