உலகளவில் புற்றுநோய் மரணங்கள் அதிர்ச்சிகரமாக அதிகரிக்கக்கூடிய அபாயம் இருப்பதாக, புகழ்பெற்ற மருத்துவ இதழ் லான்செட் எச்சரித்துள்ளது.
தற்போது ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர். ஆனால், 2050 ஆம் ஆண்டிற்குள் இந்த மரணங்கள் 18.6 மில்லியனாக (1.86 கோடி) உயரும் அபாயம் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது தற்போது இருக்கும் நிலையை விட சுமார் 75% அதிகரிப்பு ஆகும்.
மேலும், புற்றுநோயால் பாதிக்கப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டளவில் 35 மில்லியன் ஆக உயரக்கூடும் என ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய நிலையை விட 77% அதிகம் ஆகும்.
இந்தியாவில் புற்றுநோய் ஏற்படும் விகிதம் 1990-ஆம் ஆண்டை விட 26% அதிகரித்துள்ளது. அதேபோல், புற்றுநோயால் உயிரிழக்கும் விகிதமும் (mortality rate) கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் புகையிலைப் பயன்பாடு, தவறான உணவு பழக்கங்கள், மாசு, சர்க்கரை நோய் போன்றவைகள் புற்றுநோய் மரணங்களுக்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
லான்செட் ஆய்வு, புற்றுநோய் அபாயத்தை குறைப்பதற்கு புகைபிடித்தலைத் தடைசெய்தல், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவித்தல், உடற்பயிற்சியை அதிகரித்தல், தடுப்பூசி செலுத்துதல், மற்றும் சுற்றுச்சூழல் மாசை குறைத்தல் போன்றவை அவசியம் என வலியுறுத்துகிறது.