headlines

img

நவ தாராளவாதத்தின் முடிவும் ,வரலாற்றின் மறுபிறப்பும்- ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்

2001ம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், இப்போது ஐ,நா வையின் பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றின் தலைவராக உள்ளார். இந்தக் கட்டுரையில் அவர் முன்வைக்கும் கருத்துக்களை அவர் 2000க்கு முந்தைய ஆண்டுகளில் இதே தீவிரத்துடன் அவர் வலியுறுத்தி இருந்தாரேயானால் அவருக்கு நோபல் வழங்கப்பட்டிருக்குமா என்பது கூட ஐயமே. 2008 ல் உலகம் சந்தித்த பொருளாதார நெருக்கடி, திறந்த சிந்தனையுடைய அறிஞர் பெருமக்களை முதலாளியப் பொருளாதாரம், நவ தாராளவாதம் ஆகியன குறித்த மறு சிந்தனைகளுக்கு ஆளாக்கியுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட சந்தை என்பது மார்க்சியத்தின் பங்களிப்புகளில் ஒன்று. நேருகால இந்தியப் பொருளாதாரமும் அதை ஒரு குறிப்பிட்ட அளவு ஏற்றுக் கொண்டது. திட்டமிட்ட பொருளாதாரத்தைச் செயல்படுத்த ‘திட்ட ஆணையம்’ ஒன்றும் உருவாக்கப்பட்டது. மன்மோகன்சிங் காலத்திலேயே அது பலவீனப்படுத்தப்பட்டது. நரேந்திரமோடியின் காலத்தில் அது முற்றாக அழிக்கப்பட்டது.

2008-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி “சுதந்திரச் சந்தை” என்கிற முதலாளிய அணுகல்முறையைக் கேள்விக்குள்ளாக்கியது. ஆனாலும் உலக முதலாளியம் அதை ஏற்கவில்லை. ஸ்டிக்லிட்ஸ் போன்ற அறிஞர் பெருமக்கள் வெளிப்படையான மனநிலையுடன் இதை எதிர்கொண்ட பின்னணியில், இன்று அவர்கள் மீண்டும் திட்டமிட்ட பொருளாதாரத்தை நோக்கிய திருப்பத்தைப் பரிந்துரைத்து உலகை எச்சரிக்கை செய்கின்றனர். அவசியம் படித்துச் சிந்திக்க வேண்டிய கட்டுரை இது. இது மட்டுமல்ல. என் கண்ணில் பட்ட வரைக்கும் நான்கைந்து கட்டுரைகள் சமீப காலத்தில் இந்தத் தொனியில் எழுதப்பட்டுள்ளன. கொரோனோவின் பின்னணியில் உருவான ஒரு எளிய நன்மை என்றே இதை நாம் கொள்ள வேண்டும். கொரோனா மற்றும் பருவநிலை மாற்ரம் முதலானவை இன்று கடந்த நாற்பதாண்டுகால நவ தாராள அணுகல் முறை, உலகமயம் ஆகியன குறித்த பல கேள்விளை உலகின் முன் வைத்துள்ளன. பொருளாதாரம் தொடர்பாக மார்க்சியம் முன்வைத்த கருத்துக்கள் பலவும் இன்று மீள்வாசிப்புக்கு உள்ளாகியுள்ளன. அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸின் கட்டுரையின் சாராம்சம் இங்கு தரப்படுகிறது...

                  ---அ.மார்க்ஸ்

  1. சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பியக் கூட்டமைப்பின் வீழ்ச்சியோடு ‘பனிப்போர்க்காலம்’ (Cold War) முடிவுக்கு வந்தது என்பார்கள். அப்போதுதான் எல்லோராலும் கொண்டாடப் பட்ட ஃபுகுயமாவின் “வரலாறு முடிவுக்கு வந்ததா?” (Francis Fukuyama , The end of history?) எனும் நூல் வெளிவந்தது. கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் ஊடாக ‘தாராள ஜனநாயகம்’ (Liberal Democracy) மற்றும் ‘சந்தைப் பொருளாதாரம்’ (Market Economy) ஆகியவற்றிற்கு இருந்த கடைசித் தடையும் அகன்றுவிட்டது என்பது இதன் பொருள். பொதுவான ஏற்பு அந்நூலுக்கு இருந்தது. முதலாளிய ஆதரவாளர்கள்  அதைக் கொண்டாடினர்.
  2. விதிகளின் அடிப்படையில் இயங்கும் தாராளவாத உலக ஒழுங்கிலிருந்து நாம் ஒரு பின்னடைவைச் சந்தித்துக் கொண்டுள்ளோம். இன்று உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிற நாடுகள் எதேச்சாதிகார வாய்வீச்சு வீரர்களால் ஆளப்படுகின்றன. ஃபுகுயமாவின் கருத்துக்கள் காலாவதி ஆனதாகவும், அபத்தமானதாகவும் இன்று ஆகிவிட்டன. ஆனாலும் கடந்த 40 ஆண்டுகளாக இங்கு கோலோச்சும் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் இன்று இன்னும் தீவிரமாகத் திணிக்கப்படுகின்றன.
  3. கட்டுப்பாடற்ற சந்தைகள்தான் எல்லோருக்குமான பொருளாதார வளத்தை அளிப்பதற்கான உறுதியான ஒரே வழி என்கிற நவதாராளவாத நம்பிக்கை இன்று கேள்விக்குள்ளாகி இருக்கிறது. மூச்சுத் திணறி உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் நவதாராளவாதத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை சிதைவது என்பது ஏதோ எதேச்சையாக நடக்கும் ஒன்றல்ல. நவதாராளவாதம் என்பது கடந்த நாற்பது ஆண்டுகளில் ஜனநாயக வேர்களை அறுத்துள்ளது.
  4. நவதாராளவாதத்தால் (NeoLiberalism) முன்வைக்கப்படும் உலகமயம் என்பது தனிநபர்களையும், மொத்தச் சமூகத்தையும் தமது சொந்தத் தலைவிதியைக் கட்டுப்படுத்த இயலாதவர்களாக ஆக்குகிறது. ஹார்வர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் டானி ரொட்ரிக் தனது நூலிலும், (Dani Rodrik, Straight talk on Trade) நான் எனது சமீபத்திய நூல்களான “உலகமயமும் அதன் அதிருப்திகளும்- ஒரு மறு பரிசீலனை) Globalization and Its Discontents Revisited) மற்றும் (மக்கள், அதிகாரம் மற்றும் லாபங்கள் (People, Power, and Profits) ஆகியவற்றிலும் இதை விரிவாக விளக்கியுள்ளோம்.
  5. மூலதனச் சந்தையைத் திறந்து கட்டுப்பாடுகள் இன்றி தாராளமயமாக்குதல் (capital- market liberalisation) என்பது மிகக் கொடூரமானது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புள்ள ஒரு வேட்பாளர் ‘வால் ஸ்ட்ரீட்’டின் ஆதரவை இழந்தாரானால் அந்த நாட்டிலிருந்து தங்கள் பணத்தை வங்கிகள் எடுத்துவிடும். வளர்ந்துவரும் அதன் பொருளாதாரம் பாதிக்கப்படும். அதன்மூலம் உருவாகும் பெரும் பொருளாதார நெருக்கடி நிலையா, இல்லை  உங்களின் ஆதரவுக்குரிய வேட்பாளரின் வெற்றியா எது வேண்டும் எனும் கேள்வி அம் மக்கள் முன் வைக்கப்படும். இதன் பொருள் குடிமக்களைக் காட்டிலும் வால் ஸ்ட்ரீட் அதிக சக்தி உடையது என்பதுதான்.
  6. வளர்ந்துவரும் நாடு என்பதாக அன்றி ஒரு வளர்ச்சி அடைந்த பணக்கார நாடாக இருந்தாலும் கூட சாதாரண மக்கள் தாங்கள் விரும்பும் கொள்கைதான் கடைபிடிக்கப்பட வேண்டும் என அரசைக் கோர முடியாது. சமூகப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு, வரிச் சீரமைப்பு, கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார அமைப்பு என எதையும் நீங்கள் கோர இயலாது. “நாடு சந்தைப் போட்டியைச் சமாளிக்க இயலாமல் பலவீனமாகிவிடும். வேலை வாய்ப்புகள் சுருங்கும். நீங்கள்தான் இதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” – என நீங்கள் எச்சரிக்கப்படுவீர்கள்.
  7. பணக்கார நாடாக இருந்தாலும் சரி, ஏழை நாடானாலும் சரி எதுவானாலும் அங்குள்ள மேட்டிமைச் சக்திகள் (elites), “நவதாராளவாதக் கொள்கைகளால் விரைவான பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதனால் வரும் பயன்கள் எல்லோரையும் வந்தடையும். ஏழைகள் உட்பட எல்லோரும் பயனடைவர். இந்த நிலை ஏற்பட வேண்டுமானால் தொழிலாளிகள் குறைந்த ஊதியத்தில் திருப்தி அடைய வேண்டும். அது மட்டுமல்ல எல்லோருமே முக்கிய அரசு நலத் திட்டங்கள் குறைக்கப்படுவதை சகித்துக் கொள்ள வேண்டும்”- என வாக்குறுதிகள் அளிப்பார்கள்.
  8. தங்களின் வாக்குறுதிகள் விஞ்ஞானப்பூர்வமாக வகுக்கப்பட்டன எனவும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் எல்லாம் மேற்கொள்ளப் படுகின்றன எனவும் அவர்கள் சொல்லிக் கொள்வார்கள். (இத்தகைய நவதாராளவாதக் கொள்கையைப் பின்பற்றி) அப்படி 40 ஆண்டுகள் இன்று ஓடி விட்டன. இதோ நம் முன் எல்லாவற்றுக்கும் தரவுகள் உள்ளன. வளர்ச்சி வேகம் குறைந்துதான் உள்ளதே ஒழிய அதிகரிக்கவில்லை. அடைந்துள்ள வளர்ச்சியின் பயன்களும் மேலே உள்ள ஒரு சிலரைத்தான் எட்டியுள்ளன. ஊதிய உயர்வுகள் இன்றி தேக்கம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. வருமானமும் வளர்ச்சியும் மேல்நோக்கித்தான் நகர்கின்றனவே ஒழிய கீழே உள்ளவர்களுக்குக் கசியவில்லை. 
  9. போட்டியைச் சமாளிப்பது எனக் காரணம் சொல்லி ஊதிய உயர்வு இல்லை எனக் கட்டுப்படுத்துவதும், அரசுத் திட்டங்களைக் குறைத்துக் கொள்வதும் எவ்வாறு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு வழி வகுக்கும்? சாதாரண மக்கள் தாங்கள் விலைக்கு விற்கப்பட்டவர்களாகவும், வஞ்சிக்கப் பட்டவர்களாகவுமே உணர்வர்.
  10. இந்த மாபெரும் ஏமாற்றத்தின் அரசியல் பின்விளைவுகளை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டுள்ளோம். மேட்டிமைச் சக்திகளின் நம்பிக்கத் துரோகம், நவ தாராளவாதத்தின் அடிப்படையாக உள்ள இவர்களின் “பொருளாதார அறிவியல்’’, இவற்றைச் சாத்தியமாக்கிய ஊழல் மிக்க அரசியல் அமைப்பு ஆகியவற்றின் வஞ்சகத்தை அனுபவித்துக் கொண்டுள்ளோம்.
  11. எதார்த்தம் என்னவெனில் “நவதாராளவாதம்” (Neo Liberalism) என நாம் சொன்னாலும் தாராளவாதத்திற்கும் (liberal) அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது ஒருவகையான அறிவுத்துறைச் சனாதனத்தையே திணித்தது. அதன் பாதுகாவலர்கள் எந்நாளும் மாற்றுக் கருத்தைச் சகித்துக் கொண்டதில்லை. பொருளாதாரம் தொடர்பான பழமைவாத-சனாதனச்  சிந்தனைகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட பொருளியல் அறிஞர்களின் கருத்துக்கள் புறந்தள்ளப்பட்டன. அப்படியான அறிஞர்கள் ஏதாவது முக்கியமற்ற துறைகளுக்கு மாற்றப்பட்டார்கள். கார்ல் பாப்பர் போன்ற தத்துவவியலாளர்கள் முன்வைத்த ‘திறந்த சமூகம்’ (open society) என்கிற கருத்தாக்கத்திற்கும் இவர்களின் நவதாராளவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜார்ஜ் சோரோஸ் சுட்டிக் காட்டியதைப் போல கார்ல் பாப்பர் நமது சமூகம் சிக்கலானது என்பதையும், தொடர்ந்து பரிணாமம் அடைந்து கொண்டே வருவது என்பதையும் சொன்னபோது இவர்கள் அதை கணக்கில் கொண்டதே இல்லை. இப்படியான சமூகங்களில் நாம் எந்தளவிற்கு அதிகமாகக் கற்றுக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு அந்த அமைப்பின் இயக்கத்தில் மாற்றத்தை விளைவிக்க முடியும்.
  12. நவதாராளவாதிகளின் இத்தகைய சகிப்பின்மை ‘பேரளவுப் பொருளியல்’ (macroeconomics) துறைகளிலேயே அதிகம் வெளிப்பட்டது. அதில் அப்போது நடைமுறையில் இருந்த மாதிரிகள் (models) 2008 இல் நாம் சந்தித்தது போன்ற நெருக்கடிகளை எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் அது நேர்ந்தபோது அதை ஏதோ 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் வெள்ளம் என்பது போல அரிதான, முன் ஊகிக்க முடியாத ஒரு அசாதாரணமான விளைவு என்றே அவர்கள் எதிர்கொண்டனர்.
  13. இப்போதும் கூட நவதாராளவாதக் கோட்பாடுகளை வலியுறுத்துபவர்கள் வெளி பாதிப்புகளால் பாதிக்கப்படாத, சுயமாக ஒழுங்குபடுத்திக் கொள்ளும் சந்தைகள் என்கிற தங்களின் நம்பிக்கையை விட்டுவிடத் தயாராக இல்லை. கட்டுப்பாடற்ற தாராளவாதம்தான் இந்த நெருக்கடிகளுக்குக் காரணம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பழைய கிரேக்ககாலத் தாலமி அரசப் பாரம்பரியத்தினர் போல எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராயாமல் அவற்றைத் தமக்குத் தெரிந்த நம்பிக்கைகளின் ஊடாக விளங்கிக் கொள்ள முயல்பவர்களாகவே அவர்கள் இருந்தனர்.
  14. ஒழுங்குபடுத்தப்படாத சந்தைகள் பயனளிக்காது என்பதை 2008 பொருளாதார நெருக்கடியாலும் கூட நாம் உணராமற் போயிருந்த போதும், இப்போது காலநிலை மாற்றத்தால் (climate change) உருவாகப் போகிற நெருக்கடி உறுதியாக நம்மை உணர வைக்கும். நவதாராளவாதம் நமது சகாப்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும்  என்பது உறுதி. நமது நவதாராளவாதிகள் அறிவியலின் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு, எதார்த்தத்தை எதிர்கொள்ளாமல் இப்போது காட்டிக் கொண்டுள்ள“பொறுமையை” தொடர்வார்களே யானால், அதனால் உருவாகும் பிரச்சனைகள் மேலும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்வது உறுதி. 
  15. இந்த நம் உலகையும், நம் காலப் பண்பாட்டையும் காப்பாற்றுவதற்கு நம் முன்னுள்ள ஒரே வழி வரலாற்றின் மீள்பிறப்பிற்கு வழி செய்வதுதான். அறிவொளிக்கால சிந்தனையை நாம் இன்னும் வீறுபடுத்துவதுதான். சுதந்திரம், அறிவின் ஆற்றல், ஜனநாயக மதிப்பீடுகள் ஆகியவற்றிற்கு நாம் மீண்டும் நம்மை அர்ப்பணித்துக் கொள்வதுதான்.

 

 

;