headlines

img

வெற்று முழக்கம்!

காசநோய் ஒழிப்பில் தனக்கிருக்கும் பொறுப்பை ஒன்றிய அரசு தட்டிக்கழிப்பதாக   நாடாளுமன்ற நிலைக்குழு  நேரடியாகக் குற்றம் சாட்டியிருக்கிறது. காசநோய் ஒழிப்பிலும்  வழக்கம் போல் மோடி அரசின் வெற்று முழக்கம் அம்பலமாகியிருக்கிறது. 

‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக் கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்கிறார் வள்ளுவர். நோய் அறிந்து நோய்க்கான மூல காரணம் அறிந்து அதைத் தணிக்கும் வழியை அறிந்து சரியாகச் செயல்பட வேண்டும். அது தான் நோயைத் தீர்க்கும் வழியாக அமையும். காச நோயை 2025க்குள் இந்தியாவிலிருந்து ஒழித்து விடுவோம் எனப் பிரதமர் மோடி முழங்கி  வருகிறார். ஆனால் காச நோய்க்கான மூலகார ணத்தைச் சரி செய்யாமல் எப்படி நோயை அகற்ற முடியும்?

காச நோய்க்கு அடிப்படை, ஊட்டச்சத்துக் குறைபாடே ஆகும். 2022 ஆய்வின்படி இந்திய மக்கள் தொகையில் 44 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன்  இருக்கின்றனர். 121 நாடுகளின் உலகளாவிய பசிக் குறியீட்டில் இந்தியா 107ஆவது இடத்தில் இருக்கிறது. இதில் முன்னேற்றம் காணாமல் எப்படி காச நோயை மட்டும் தனியாக ஒழித்திட முடியும்?

உலக  காச நோயாளிகளில் நான்கில் ஒரு பகுதியினர்  இந்தியர்களாக இருக்கின்றனர். ஆனால் நமது பிரதமர் மோடியோ எந்த உருப்படி யான திட்டமுமின்றி நாங்கள் 2025க்குள் இந்தி யாவிலிருந்து  காசநோயை ஒட்டுமொத்தமாக  ஒழித்துவிடுவோம் என்கிறார். 2025 ஆம் ஆண்டிற்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. அதற்குள் முழுவதுமாக  காச நோயை ஒழிக்க முடியுமா?

இந்தியாவில் 2020இல் மட்டும் 18.5 லட்சம்  புதிய காசநோயாளிகள் கண்டறியப்பட்டனர். இதே போல்  2021 இல் 21.3 லட்சம் பேரும், 2022 இல் 24.2 லட்சம் பேரும் கண்டறியப்பட்ட னர். இதே காலங்களில்  காசநோயால் ஏற்படும் மரணங்கள் 11 சதவிகிதம் அதிகரித்திருக்கின் றன.  2021 - 22 ஒன்றிய பட்ஜெட்டில் காச நோயை ஒழிக்க ரூ.3,409.94கோடி ஒதுக்கப்பட்டது.  2022 - 23 ஆம் நிதியாண்டில் ரூ. 753.11 கோடி குறைக்கப் பட்டு  ரூ. 2,656.83 கோடி மட்டுமே ஒதுக்கப் பட்டது. இதுதான் மோடி அரசு காச நோயை ஒழிக்கும் லட்சணம்!. 

காசநோயாளிகளுக்கு  ஊட்டச்சத்திற்காக நேரடி மானியம் வழங்க  2018இல் “நிக்சய் போஷன யோஜனா” என்ற திட்டத்தை அறிவித்தது. இதில் மொத்தமுள்ள  24 லட்சம் காசநோயாளிகளில் 66 சதவிகிதம் பேருக்கு ஒரு மாதம் மட்டுமே ரூ.500 மானி யமாகக் கிடைத்திருக்கிறது. அதோடு சரி. கணக் கெடுப்பும் இல்லை. கண்காணிப்பும் இல்லை. 

இந்நிலையில் இனி தனியார் நிறுவனங்கள் “நிக்சய் மித்ர” என்ற திட்டத்தின் கீழ் காச நோயா ளிகளைத் தத்தெடுத்துப் பார்த்துக் கொள்வார் கள் என கைகழுவியிருக்கிறது. மோடியின் வெற்று முழக்கம் நோயை ஒழித்திடாது.