மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கோரி வரும் நிலையில் இனிமேல் இளநிலை படிப்புகள் அனைத்திற்கும் பொது நுழைவுத் தேர்வு அவசியம் என்று மற்றொரு
இடியை இறக்கியிருக்கிறது ஒன்றிய அரசு.
இந்நிலையில், மாநில அரசின் கல்வி உரிமையில் தலையிடும் வகையில் இளநிலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப் பட்டிருப்பதை ஏற்க முடியாது. இந்த உத்தரவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வலி யுறுத்தியுள்ளார்.
இந்த பொது நுழைவுத் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்க இயலாது என்று அவர் அறிவித்திருப் பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் ஒன்றிய அரசு அறிவிப்பின்படி நாட்டில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்பு களுக்கு பொது நுழைவுத் தேர்வு மூலமே வரும் கல்வி யாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டுமென்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
நாட்டிலுள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்க ளுக்கு இந்த பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று கூறப்பட்டிருப்பதோடு இனிமேல் +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப் பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. இது அப்பட்ட மான அராஜகம் என்பது மட்டுமின்றி பெரும் பகுதி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதிலிருந்து தடுக்கக்கூடிய பெரும் சதி வலையாகும்.
சிபிஎஸ்இ எனப்படும் ஒன்றிய அரசின் பாடத்திட்டத்திலிருந்து மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படுமாம். எனவே மாணவர்கள் என்சிஇ ஆர்டி பாட நூல்களில் கவனம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாநில அரசின் பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள், தாய்மொழி வழியில் படிக்கும் மாணவர்கள், கிராமப்புற மற்றும் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இதனால் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இப்போதைக்கு மத்திய பல்கலைக்கழ கங்களுக்கு பொது நுழைவுத் தேர்வு என்று அறி விக்கப்பட்டிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து கல்விநிலையங்களிலும் பட்டப்படிப்பில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு அவசியம் என்று அறிவிக்கப்படும். அதுதான் தேசிய கல்விக்கொள்கையின் குறிக்கோள். இதை அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து முறியடிக்க வேண்டும்.
இது கல்வியை ஒன்றியமயமாக்கும் முயற்சி மட்டுமல்ல, கார்ப்பரேட் மற்றும் காவிமயமாக்கு வதற்கான முயற்சியே ஆகும். மாநில பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் கூடு தலாக சிபிஎஸ்இ பாடங்களையும் படிக்க வேண்டி யிருக்கும். இது தனியார் பயிற்சி நிறுவனங்களின் கொள்ளைக்கு வழிவகுக்கும். பெரும் பகுதி மாணவர்களை உயர்கல்வி நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கும் இந்தச் சதியை முறிய டிக்க வேண்டும். தமிழக அரசு நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது என்று அறிவித்துள்ளது வரவேற்கத் தக்கது. இது இந்தியாவின் குரலாக மாற வேண்டும்.