பாஜக ஆளும் கர்நாடகத்தில் மதமாற்ற தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஜனநாயக விரோதச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுபான்மை கிறித்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தன. எனினும் மாநிலத்தில் எத்தனை யோ பிரச்சனைகள் இருக்க அவசர அவசரமாக இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது பசவராஜ் பொம்மை அரசு.
கர்நாடகத்தில் இந்துக்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதாக பாஜக எம்எல்ஏ கூலிஹட்டி சேகர் கடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறினார். மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வருவ தற்கான முன்னோட்டமாக இது கருதப்பட்டது. இந்நிலையில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது கர்நாடக அரசு.
‘கட்டாய மத உரிமை சட்ட மசோதா 2021’ என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட மசோதாவில் மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச மாக 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அப ராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எந்தவொரு மதத்தையும் பின்பற்றவும், வழிபாடு நடத்தவும், பிரச்சாரம் செய்யவும் இந்திய அரசியல் சாசனம் உரிமை வழங்கி யுள்ளது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்க ளான உ.பி, குஜராத்தில் இத்தகைய சட்டம் கொண்டு வரப்பட்டது. முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் ம.பி.யிலும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டம் 25 மற்றும் 26ஆவது பிரிவுக்கெதிரானது இந்த மதமாற்ற தடைச் சட்டம். இத்தகைய சட்டத்தை ஒன்றிய அளவிலும் கொண்டு வரப்போவதாக அவ்வப் போது பாஜகவினர் மிரட்டி வருகின்றனர்.
சிறுபான்மை கிறித்துவ மற்றும் முஸ்லிம்க ளுக்கு எதிராக இந்துத்துவா வெறியர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி யும், லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக கூறியும் அப்பாவி சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகின்ற னர். அத்தகைய அராஜகத்தில் ஈடுபடும் வெறி யர்களின் கையில் மேலும் ஒரு ஆயுதமாகவே இந்த கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் பாஜக ஆளும் மாநிலங்களில் தரப்படுகிறது.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் போன்ற உயர் பொறுப்புகளில் இருப்பவர்களே பேசி வருகின்றனர். இந்துத்துவா பரிவாரத்திற்கு இத்தகைய பேச்சுக்கள் ஊக்கமளிக்கின்றன.
உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நெருங்குவதையொட்டி மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் பிரச்சாரம் மீண்டும் வேகமாக கிளப்பி விடப்படுகிறது. ஹரித்துவாரில் மதங்களின் நாடாளுமன்றம் என்ற பெயரில் நடத்தப்பட்ட மூன்று நாள் கூட்டம் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வெறியைத் தூண்டுவதாக நடந்துள்ளது. தேசத்தின் மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து நிற்க வேண்டிய நேரம்இது.