headlines

img

‘நீட்’ தொலையட்டும்

நீட் எனப்படும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் வரும் மே 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்தாண்டு சிபிஎஸ்இ வாரியம் நீட் தேர்வை நடத்திய போது, பல்வேறு குளறுபடிகள் நடந்தன. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குறி வைத்து அலைக்கழிக்கப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இமாச்சலப்பிரதேசம், கேரளம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் ஒரு மாணவரின் தந்தை உயிரிழக்க நேர்ந்தது. அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுதலாம் என்று அறிவித்திருந்த நிலையில், வினாத்தாள்களை தமிழில் ஏராளமான பிழைகளோடு மொழி பெயர்த்தனர். இதனால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள்மதிப்பெண்களை இழந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தந்தார். மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதை ஒத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது.

இந்த பின்னணியில் சிபிஎஸ்இ வாரியம்தேர்வு நடத்தும் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டுதற்போது தேசிய தேர்வு முகமை இந்தாண்டு தேர்வு நடத்துகிறது. வழக்கம் போல பல்வேறு குளறுபடிகள் இந்தாண்டும் தொடர்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களை கடைசி நேரத்தில் மாற்றியுள்ளனர். இதுகுறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதை பார்க்காதமாணவர்களின் கதி அதோ கதிதான். மேலும் கலாச்சாரக் காவலர்கள் போல பல்வேறு உடைக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு வரும் மாணவர்கள் வெளிர் நிறத்திலான அரைக்கை சட்டைகளை மட்டுமே அணிந்து வர வேண்டுமாம். சற்று அடர்த்தியான நிறத்தில் சட்டை அணிந்து வந்தால் அவர்கள் காப்பியடிப்பார்கள் என்று பொருளா? அறிவைச் சோதிப்பதாக சொல்லிக் கொண்டு ஏன் இப்படி முட்டாள்தனமான விதிகளை உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.

மணிப்பர்ஸ், கண்ணாடி, கைப்பை, பெல்ட், தொப்பி, வாட்ச், கை அணிகலன், சாப்பிடும் உணவுகள், தண்ணீர் பாட்டில் கொண்டு வரக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில்நீட் தேர்வு என்ற பெயரில் மாணவ சமூகத்திற்கெதிராக ஒரு உளவியல் யுத்தம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு வகையான பாடத்திட்டமுறை இருக்கும் போது சிபிஎஸ்இ பாடத்தில் மட்டும் கேள்வி கேட்பது மிகப் பெரிய அநீதி.இதை மறைப்பதற்கு அர்த்தமற்ற கட்டுப்பாடுகளை விதித்து திசை திருப்புகின்றது. மோடி வகையறாவின் நோக்கம் மாணவர்களை மருத்துவக் கல்விக்கு தகுதிப்படுத்துவதல்ல. மாறாக தாய்மொழியில், கிராமப்புறத்தில் படித்து வரும் மாணவர்களை மருத்துவக் கல்வியிலிருந்து விரட்டும் மிகப் பெரிய சதியே நீட் தேர்வு ஆகும்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் நீட் தேர்வு முற்றாக ஒழிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. நீட்டைக் கொண்டுவந்த மோடி ஆட்சியையும் அதை தாங்கிப்பிடிக்கும் அதிமுக ஆட்சியையும் நீட்டோடு சேர்த்து வீட்டுக்கு அனுப்புவதுதான் தமிழக மாணவர்களின் நலன் காக்கும் ஒரே வழியாகும்.

;