headlines

img

மத்திய அரசைக் கண்டிக்க துணிவில்லாத அதிமுக 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகசெயற்குழு சென்னையில் நடந்துமுடிந்துள்ளது, அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் என இருஅணிகளாக கட்சி பிரிந்திருப்பது இந்த கூட்டத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது.

செயற்குழு கூட்டத்தில் முதல்வர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யவேண்டும்என்று ஒரு தரப்பினரும் வழிகாட்டும் குழுவைஅமைத்த பிறகு அதை முடிவு செய்துகொள்ளலாம் என்று மற்றொரு தரப்பும் மல்லு கட்டியதாகத் தெரிகிறது. 
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது வரிவருவாயில் இழப்பைச் சந்திக்கும் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசுஉறுதியளித்தது. ஆனால் அதன்படி நடந்துகொள்ளவில்லை. இப்படி மத்திய அரசு ஜிஎஸ்டிநிலுவைத்தொகையாக 23ஆயிரத்து 763 கோடி ரூபாயைத் தமிழகத்திற்கு வழங்கவேண்டும். இதுகுறித்து அதிமுக செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறதே தவிர, மத்திய அரசிடம் கெஞ்சுகிறதே தவிர கண்டனம் என்று ஒரு வார்த்தையை தீர்மானத்தில் சேர்க்கத் தயங்குகிறது. 

நீட்தேர்வே  தேவையில்லை என்பதுதான்அதிமுகவின் நிலைப்பாடு என்று மற்றொரு தீர்மானம் பெயரளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. இறையாண்மை மிக்க தமிழக சட்டப்பேரவை இது தொடர்பாக ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை குப்பைத்தொட்டியில் வீசியெறிந்த மோடிஅரசைக் கண்டிக்க அதிமுக செயற்குழு தயாராக இல்லை.கொரோனா நோய்த்தடுப்பு பரிசோதனைகளுக்கு ஆகும் செலவில் 50விழுக்காட்டை  ஈடுகட்ட பிஎம் கேர் நிவாரண நிதியிலிருந்து தொகை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்கவும், நோயுற்றோருக்குச் சிகிச்சை அளிக்கவும், போதுமான நிதியை மாநில அரசுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் பிரதமருக்குகடிதம் எழுதியும் இதுவரை  நிதி ஒதுக்கப்படவில்லை. நீர் அமைப்புகளைப் பழுதுபார்த்து, புதுப்பித்துச்சீரமைத்தல் திட்டத்தில் 25.90 கோடி ரூபாயும், திட்டங்கள் சார்ந்த நிலுவைத் தொகையாக மொத்தம் 16,505.32 கோடி ரூபாயும், 13 ஆவது நிதிக்குழுவின் நிலுவை மானியங்கள் 522.91 கோடி ரூபாயும், 14 ஆவது நிதிக் குழுவின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொகை 2,577.98 கோடி ரூபாயும்,  வரவேண்டியுள்ளது.  மாநிலங்களின் வளர்ச்சியைப் பற்றி வாய்கிழியப் பேசும் மோடி வளர்ச்சி திட்டங்களுக்கான  நிதியை உரியக் காலத்தில் வழங்க மறுக்கிறார்.

இப்படி பல வழிகளில் தமிழகத்தை வஞ்சிக்கும்மத்திய அரசைக் கண்டிப்பதற்குப் பதில் மென்மையான போக்கை அதிமுக கடைபிடிக்கிறது. அமலாக்க இயக்குநரகம், சிபிஐ-க்கு பயந்து தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக  அதிமுக அரசு காவுகொடுத்துக்கொண்டிருக்கிறது. இப்படிதமிழகத்திற்குத் தொடர்ந்து துரோகமிழைக்கும் இவர்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில்மக்கள் நிச்சயம் மறக்கமுடியாத பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.

;