headlines

img

ஒற்றுமையை சீர்குலைத்தது யார்?

ஒற்றுமையே நாட்டின் வலிமை என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இதில் யாருக்கும் இரு வேறு கருத்து இருக்க வாய்ப் பில்லை. ஆனால் இதற்காக அவர் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சிகளும், சம்பவங்களும் ஒற்று மையை வலிமைப்படுத்துவதற்கு பதிலாக மக்க ளிடம் வேற்றுமையை அதிகப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

‘மன் கி பாத்’ என்ற பெயரில் பிரதமர் மோடி மாதம் ஒரு முறை வானொலியில் பேசி வருகிறார். இந்த மாத உரையில் தீபாவளியின் பெருமை களை எடுத்துரைத்த அவர், சர்ச்சைக்குரிய அயோத்தி பிரச்சனையில் ஒரு சார்பு நிலை யெடுத்து பேசியுள்ளார். 

“அயோத்தி பிரச்சனையில் 2010ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு முன் மக்களின் உணர்வுகளை தூண்டிவிடும் வகை யிலும், ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் பேசி வந்தனர். ஆனால் தீர்ப்பை பல்வேறு தரப்பி னர் அமைதியாக ஏற்றுக் கொண்டனர்” என்று கூறியுள்ளார். பிரதமர் இவ்வாறு கூறியுள்ளது உண்மைக்கு முற்றிலும் மாறானதாகும்.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு தரப்பினர் ஏற்றுக்கொள்ளாததால்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் பிரதமர் இவ்வாறு திரித்துக் கூறுவது தீர்ப்பு குறித்த முன்னோட்டமா அல்லது வரும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மிரட்டலா என்று ஐயம் கொள்ள வைக்கிறது.

“ராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் நீண்டகால மாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதி கட்டி டத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்த மானது. தற்போது ராமர் சிலை வைக்கப் பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்பட வேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜென்மபூமி நியாஸ், சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகோரா ஆகிய மூன்று தரப்புக்கும் தரப்பட வேண்டும் என்பது தான் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு. இது ஏற்கத்தக்கதல்ல என்று அப்போதே எதிர்ப்புக் குரல் எழுந்தது. இந்த இடம் யாருக்குச் சொந்தமானது. என்பதுதான் வழக்கு. ஆனால் தேவையில்லாமல் மதம் மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்தி ருக்கிறது என்று சட்ட நிபுணர்கள் விமர்சித்தனர். 

இப்போது அதை மோடி அந்த வழக்கை மேற்கோள் காட்டுவது ஏன்? வழக்கு நீதிமன்றத் தில் இருக்கும்போதே சட்ட விரோதமாக மசூதியை இடித்தது ஆர்எஸ்எஸ், விஎச்பி, பாஜக பரிவாரம்தான். அது ஒற்றுமையை வளர்க்கும் செயலா?  

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் நல்லிணக்கமும், அமைதியும், ஒற்று மையும் சீர்குலைக்கப்பட்டதை மறைக்க முடியுமா? ஒற்றுமையை சீர்குலைத்துக் கொண்டே ஒற்றுமை குறித்து பேசுவது வெறும் வாய்ஜாலமே.

;