headlines

img

கை கொடுக்கும் திட்டம் ...  

நாட்டிலேயே முதல்முறையாக 16 வகைகாய்கறிகளுக்கு அடிப்படை விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு ஆதரவான நடவடிக்கையை கேரள மாநில இடது ஜனநாயகமுன்னணி அரசாங்கம் எடுத்திருக்கிறது. இதன்மூலம் வெளிச்சந்தையில் காய்கறிகளின் விலைஉயர்ந்தாலோ, குறைந்தாலோ விவசாயிகளுக்குபாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் இந்த அடிப்படை விலை நிர்ணய திட்டம் கை கொடுக்கும்.

அண்மையில் மத்திய பாஜக அரசு நாட்டின் விவசாயத்தையே ஒழித்துக் கட்டும்  வகையில் மூன்று புதிய சட்டங்களை கொண்டு வந்தது. விவசாய விளை பொருட்களுக்கு ஆதார விலைநிர்ணயம் செய்வதையும், அரசே கொள்முதல் செய்வதையும் கைவிடுவதும்; ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை ஒழித்துக் கட்டுவதும்;பொது விநியோக முறையை சீர்குலைப்பதும் ஆகியவற்றுக்கே இந்தச் சட்டங்கள் இட்டுச்செல்லும் என்பதை அறிந்து நாடு முழுவதும்விவசாயிகள் போர்க்கோலம் பூண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், 16 வகை காய்கறிகளுக்கு உற்பத்திச் செலவை விட 20 சதவீதம் கூடுதல்தொகையை சேர்த்து அதை அடிப்படை விலையாக நிர்ணயம் செய்து அறிவித்து புதிய திட்டத்தைகேரள மாநில அரசு  நாட்டுக்கே முன்னோடியாக நவ.1முதல் அமல்படுத்தவிருக்கிறது.இதை உள்ளாட்சி அமைப்புகளும் கூட்டுறவுத்  துறையும் இணைந்து அமல்படுத்தும். மத்திய அரசு மாநிலங்களின் உரிமையாக உள்ளவற்றை கூட கபளீகரம் செய்து வரும்நிலையில் கேரள அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இத்தகையதிட்டத்தை கொண்டு வருவது உண்மையிலேயே முன்னுதாரணமானதும் புரட்சிகரமானதுமாகும். 

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான செயல்பாடு, திட்டங்கள் மூலம் மத்திய பாஜக அரசு நாட்டின் விவசாயத்தையும், விவசாயிகளையும் பெரு முதலாளிகளுக்கும் பண்ணை விவசாய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் அடகு வைத்துள்ளது. ஆனால் கேரள மாநிலஅரசு இதற்கு மாற்றாக விவசாயிகளை பாதுகாக்கும் இந்த புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது பிற மாநிலங்களாலும் பின்பற்றப்பட வேண்டிய, நடைமுறைப்படுத்தவேண்டிய விவசாயிகளுக்கும், மக்களுக்கும் நலம் பயக்கும் திட்டமாகும். 

நாட்டின் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று கூறி, இருப்பதையும் கெடுத்திடும் வகையில் செயல்பட்டு வரும்மத்திய பாஜக அரசு, அதை எதிர்ப்பது போலகாட்டிக்கொண்டு அவர்களின் கொள்கையையே பின்பற்றுகிற மாநில அதிமுக அரசு ஆகியவை கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு திட்டத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்து மாநிலத்திலும், மத்தியிலும் அமல்படுத்தினால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் நன்மை கிடைக்கும். இதுதான் உண்மையில் விவசாயத்தையும், விவசாயிகளையும் வாழ வைக்க இப்போது தேவைப்படும் திட்டமாகும். 
 

;