மிக்ஜம் புயல் மற்றும் கனமழை காரணமாகச் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி புரம் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பினைச் சந்தித்திருக்கின்றன. மூன்று நாட்கள் ஆகியும் இன்னும் பல இடங்களில் மழைநீர் வடியவில்லை. சில பகுதிகளில் இயல்பு நிலைக் குத் திரும்பமுடியாத சூழல் நீடிக்கிறது. இதுவரை 17 பேர் உயிரிழந்திருப்பதாகச் செய்திகள் தெரி விக்கின்றன. இயற்கையால் ஏற்பட்டிருக்கும் இந்த பேரிடரிலிருந்து சகமனிதரின் துயர் துடைத் திட அனைவரும் ஓரணியாய் இணைந்து நின்று மீண்டெழ வேண்டும்.
அரசுத் தரப்பில் செய்த முன்னேற்பாடு கள் மூலம் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டி ருக்கிறது. 411 பாதுகாப்பு முகாம்களில் 32158 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழைநீர் வடியாத காரணத்தால் இன்னும் 95 மின் விநியோக நிலையங்களிலிருந்து மின்சாரம் விநியோகிக்க முடியவில்லை. 19 லட்சம் லிட்டர் பால் விநியோ கிக்க வேண்டிய நிலையில், 15 லட்சம் லிட்டர் பால் மட்டுமே விநியோகிக்க முடிந்திருக்கிறது. தொ டர்ந்து சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டிருக் கின்றன. மாநிலம் முழுவதிலிருந்து வந்திருக்கும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டு 75 ஆயிரம் பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாக, புயல் என்பது நகர்ந்து கொண்டே இருக்கும்; ஆனால் மிக்ஜம் புயல் நகராமல் சுமார் 18 மணி நேரம் சென்னை அருகே வங்கக் கடலில் நிலை கொண்டிருந்தது. புயல்கள் மணிக்கு 10 முதல் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்லும். ஆனால் மிக்ஜம் புயல் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்ததோடு, 5 கிலோ மீட்டர் வேகத்திற்குக் குறைந்து ஸ்தம்பித்து நின்றது. இது வழக்கத்தை விடக் கூடுதலான அதிக கன மழை பொழிவிற்கு காரணமாக இருந்தது என வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின் றன. இது மற்ற புயலின் போது நேராத ஒரு நிகழ்வு.
இந்தப் புயலில் சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்திருக்கின்றன. கால் நடைகள் உயிரிழப்பு, வீடுகள் சேதம், மக்கள் பயன்படுத்தும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கியிருப்பதால் வாழ்வா தாரத்தின் இயக்கமே நெருக்கடிக்கு உள்ளாகி யிருக்கிறது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் ரூ.500 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஒன்றிய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிட வேண்டும் என முதல்வர் கோரி யுள்ளார். இதனை எவ்வித காலதாமதமுமின்றி உடனே வழங்கிட வேண்டும். சேதமடைந்த பகுதி களைப் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிட வேண்டும். வழக்கம் போல் இந்த கடும் நெருக்கடி நிலையிலும் ஒன்றிய அரசு பார பட்சம் காட்டக்கூடாது.