headlines

img

தாய்ப்பாலை  தடுப்பதா? 

இந்திய விடுதலைப் போராட்டத்தின் லட்சியங்களையும், விழுமியங்களையும் துடைத்தெறியவும், அழித்தொழிக்கவும், வெகு பிரயத்துடன்செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு. சுதந்திர போராட்டக் காலத்தில் ஏற்பட்ட ஒருமித்த உணர்வுகளுக்கு எதிரான நிலை எடுத்திருந்த  அவர்களின் முன்னோடிகளின் விருப்பங்களையே அனைத்துத் துறைகளிலும் திணித்திட முயல்கிறார்கள். 

அனைவருக்கும் கல்வி, இலவச கல்வி, தாய்மொழிக் கல்வி என்பதே மகாகவி ரவீந்திரநாத்தாகூர், மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசியதலைவர்களின் உள்ளக்கிடக்கையாக மட்டுமின்றி, மக்களின் எண்ணமாகவும் இருந்தது. அதனால்தான் புதிய அரசியல் சட்ட உருவாக்கத்தின் போது மேற்கண்ட விருப்பங்கள் யாவும் நிறைவேற்றப்படுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஒரு குழந்தை உடல் திட்பத்துடனும், உளதிட்பத்துடனும் வளர்வதற்கு தாய்ப்பால் எவ்வாறுஇன்றியமையாததோ அதைப்போலவே வளரும் குழந்தை கல்வி கற்க தாய்மொழிவழியே சிறந்ததுஎன்பது உலக நாடுகளில் உள்ள கல்வியாளர்களின் கருத்தாகவும், ஆய்வு முடிவுகளாகவும் உள்ளது. ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பினால்வளர்க்கப்பட்டவர்களோ அதற்கு நேர்மாறாகவே செயல்படுகின்றனர்.

ஐந்து வயதிற்கு மேல்தான் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்து. ஆனால் இவர்களோ 3 வயதில் பள்ளிக்குஅனுப்பச் சொல்கிறார்கள். மூன்று மொழிகளை படிக்கலாம் என்கிறார்கள். 6 வயது ஆறு மொழிகள் கூட கற்கும் திறனுடையதாக குழந்தைகள் உள்ளனர் என்று ஆய்வு கூறுவதாக ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினர், நிபுணர்கள் என்றபெயரில் ஆலோசனைகளை அள்ளி விடுகிறார்கள். அதனாலேயே புதியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் பலத்த எதிர்ப்புக்கிடையே நடைமுறைப்படுத்தத் துடிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் 20 பேருக்கு மேல் விருப்பப்பட்டால் மட்டுமே தமிழ் சொல்லிக் கொடுக்கப்படும் என்றும், அதற்கு தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்றும் அதுவும் வாரத்தில் 2 அல்லது 3 மணிநேரம் மட்டுமே என்றும் மத்திய கல்வி வாரியம்அறிவித்துள்ளது. இது மிகவும் கொடுமையானது. ஏற்கெனவே ஆறாம் வகுப்பில் சமஸ்கிருதம் கட்டாயம் என்று திணிக்கப்பட்டிருக்கும் சூழலில்தாய்மொழியாம் தமிழை படிப்பது மட்டும் விருப்பப்பட்டால் தானா?

முதல் வகுப்பிலிருந்தே தமிழ் மொழி கற்றுக்கொடுக்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் அந்தந்தமாநில மொழிகளும் முதல் வகுப்பு முதலேகற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதுவேஇயற்கை நியதிக்கு ஏற்புடையதாகும். இவையல்லால் மற்ற முயற்சிகள் யாவும் நிர்ப்பந்தித்துதிணிக்கப்படுகிற செயலாகவே இருக்கும்.  எனவேமத்திய கல்வி வாரியம் தனது தற்போதையமுடிவை கைவிட வேண்டும். அதுவே தமிழககேந்திரிய வித்யாலயா பள்ளி குழந்தைகளின் அறிவை வளர்க்கும் சிந்தனையைத் தெளிவாக்கும். சிகரம் தொடும்.
 

;