headlines

img

திருமணங்களை தீர்மானிக்கப் போவது யார்?

சாதி, மதம் கடந்து தன்னுடைய விருப்பத்தின்படி திருமணம் செய்து கொள்வது அவரது அடிப்படைஉரிமை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று. 

அந்த மாநிலத்தைச் சேர்ந்த மென் பொறியாளர்கள் வாஜித் கானும் ரம்யாவும் காதலித்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்துள்ள நிலையில் ரம்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் அரசு மகளிர்காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ரம்யாவைவிடுவிக்க வேண்டுமென வாஜித் கான் தாக்கல்செய்த ஆட்கொணர்வு மனுவின் மீதான விசாரணையின் போது கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.“திருமண வயதை கடந்த ஆணோ, பெண்ணோதனது விருப்பத்தின்படி திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. சாதி, மதம் உள்ளிட்ட பேதம்எதுவுமின்றி தனக்கு விருப்பமானவரை திருமணம் செய்து கொள்வது அவரது அடிப்படை உரிமை” என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் உச்சநீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் இதை உறுதி செய்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் பாஜக ஆளும் உ.பி. மாநிலத்தில் கொடூரமான ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்து பெண்கள் திருமணத்திற்காக மதம் மாற்றம் செய்யப்படுவதாகவும், இதை தடுப்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாகவும் ஆதித்யாநாத் அரசு விளக்கமளித்தாலும், ஒட்டுமொத்தமாக சாதி, மத மறுப்பு திருமணங்களை தடுப்பதே பாஜக அரசின் நோக்கம். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்த சட்டத்திற்கு மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் உடனடியாக ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இந்த சட்டத்தின் அடிப்படையில் சில வழக்குகள்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன. 

மாநில சட்டமன்றத்தில் மசோதா கூட தாக்கல்செய்யப்படாமல் அவசரச் சட்டம் மூலம் இது கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டார்கள் என்றுகுற்றம்சாட்டி பத்து ஆண்டுகள் வரை தண்டனைகிடைக்கும் என்றும் ஐம்பதாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த சட்டத்தைவேகவேகமாக நிறைவேற்றி வருகின்றனர். இமாச்சலப் பிரதேசத்தில் இந்த சட்டம் ஏற்கெனவேநிறைவேற்றப்பட்டுள்ளது. அரியானாவில் இதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில்உ.பி. மாநிலத்தை பின்பற்றி சட்டம் இயற்றப்படும்என்று முதல்வர் எடியூரப்பா கூறியுள்ள நிலையில், திருமணம் ஒருவரது தனிப்பட்ட உரிமை என்றும்,அதை அரசியல் சட்டமே உறுதி செய்துள்ளது என்றும் கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘லவ் ஜிகாத்’ என்று இந்துத்துவா கும்பல்குற்றம் சாட்டிய நிலையில் சாதி, மத மறுப்பு திருமணங்களை சட்ட விரோதமாக மாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.இல்லையேல் மனித சமூகம் முன்னோக்கி நகர முடியாது. 
 

;