இந்திய அரசமைப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமை பெறவில்லை என்று கூறியுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காலத்திற்கேற்ப திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜனநா யகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், அதிகாரத்தை கடைகோடி மக்கள் கொண்டு செல்லும் வரையிலும் இன்னும் தேவையானால் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
ஆளுநர் ரவி விரும்புகிற திருத்தம் அதுவல்ல. ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்திய அர சமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது இதில் மனுநீதி முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே இது முழுமையானதல்ல என்று விமர்சித்தது. அதே கருத்தைத்தான் ஆளுநர் ரவி சற்று மாற்றி இப்போது கூறியுள்ளார்.
நிலம், மொழி என்று பிரிந்துள்ளோம். நம்மிடையே பல்வேறு பிரிவினைகள் உள்ளன என்று அவர் கூறியுள்ளார். மொழிவழி மாநிலங்கள் என்ற கருத்தியலை ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏற்கவில்லை. அதிகாரங்கள் அனைத்தும் குவிக்கப்பட்ட ஒன்றிய அரசு என்பதுதான் அவர்களது விருப்பம். ஆனால் விடுதலைப் போராட்டத்தின் விளைச்சலாக மொழிவழி மாநிலங்கள் என்ற முழக்கம் முன்வந்து நாடு விடுதலைப்பெற்ற போது, மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
அதைத்தான் இப்போது பிரிவினை என்கிறார் ஆளுநர். மக்களால் தேர்வு செய்யப் பட்ட மாநில அரசுகளுக்கு அதிகபட்ச தொல்லை தருவது என்பதே பாஜக ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் குறைந்தபட்ச செயல்திட்டமாக உள்ளது. இதனால் கூட்டாட்சி தத்துவத்திற்கு குழிதோண்டப்படு கிறது. அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப் பட்ட நீதித்துறையின் உச்சபட்ச அமைப்பான உச்சநீதிமன்றம் பலமுறை ஆளுநர்களின் அத்து மீறல்களை கண்டித்துள்ளது. ஆனாலும் கூட ஆர்.என்.ரவி உள்ளிட்டவர்கள் அரசமைப்புச் சட்டத்தையோ, உச்சநீதிமன்றத்தின் அறி வுறுத்தல்களையோ மதிப்பதாக இல்லை.
அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசிடம் குவிக்க வேண்டும். மொழி, இனம் என்ற அடையாளங்களை அழிக்க வேண்டும் என்ற கருத்திலேதான் ஆளுநர் ரவி இப்போது அரசமைப்புச் சட்டம் முழுமைபெறவில்லை என முனங்குகிறார்.
மறுபுறத்தில் பாஜக தலைவர் அண்ணா மலை மொழி எனும் பூட்டை உடைத்து வெளியே வாருங்கள் என்று கூவுகிறார். பல்வேறு மொழி கள் பேசப்படும் இந்தியாவில் சமஸ்கிருதம், இந்தி என்ற இருமொழிகளை மட்டும் திணிப்பதன் மூலம் இந்திய மக்களை கூண்டுக்குள் அடைக்க முயல்வது ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம்தான். கூட்டை இழந்து கூண்டுக்குள் வாருங்கள் என்று இவர் அழைப்பது கேலிக்கூத்தானது. ஆளுநர் ரவி, அண்ணாமலை போன்றவர்களிடம் தமிழ் நாடு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.