headlines

img

டிஜிட்டல் கேரளம் - எஸ் ஆர்.பிரவீன்

டிஜிட்டல் கேரளம் 

2025 ஆகஸ்ட் 21 அன்று, கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரளாவை இந்தியாவின் முதல் முழு டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற மாநிலமாக அறிவித்தார்,  மக்களுக்கு இடையே நிலவும் டிஜிட்டல் கல்வியறிவு  இடைவெளியை குறைக்கும் நோக்கத்து டன் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து மட்டங்களிலும்  ‘டிஜி கேரளா’(DIGITAL KERALA) எனும் டிஜிட்டல் கல்வியறிவுத் திட்டத்தின் துவக்க நிலை பயிற்சிகள் தற்போது  நிறைவடைந்துள் ளது. உள்ளாட்சித் துறையின் கணக்கெடுப்பின்படி “டிஜிட்டல் கல்வியறிவு இல்லாதவர்கள்” என அடை யாளம் காணப்பட்ட மொத்தம் 21.87 லட்சம் மக்க ளுக்கு துவக்க நிலை பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர் இதில் 90% பேர் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.  இதுவரை டிஜிட்டல் சாதனங்களையே பயன்படுத்தாத மக்களுக்கு, ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி வாய்ஸ் கால் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளைச் செய்யவும், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்த வும் கற்றுக் கொடுக்கப்பட்டது. வயதானவர்கள் அரசு சேவைகளை அணுகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை களை மேற்கொள்ளவும் நல்ல முறையில் இதனை கற்றுக் கொண்டதாக அரசு அறிவித்துள்ளது.

கேரள அரசு இந்தத் திட்டத்தை மேற்கொள்ள  வழிவகுத்தது எது?

 அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் கொள்கை அடிப்படையிலான கருத்துக்கள் மேலிருந்து கீழ் நோக்கிச் செல்வதைக் காட்டிலும் கீழிருந்து மேலாக  வர வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரண மாகும். 2021 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் உள்ள புள்ளம்பாறை பஞ்சாயத்தில் இருந்து இந்த  யோசனை உருவானது. புள்ளம்பாறை பஞ்சாயத்தை சேர்ந்த சில அரசு அதிகாரிகள் பஞ்சாயத்தில் உள்ள சில வங்கிகளில் ஒன்றின் பின் ஒன்றாக நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதை கவனித்து வந்தனர். வரிசையில் நின்றவர்களில் சிலர் தினக்கூலிகள் சிலர் நூறுநாள் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள்; மற்றும் சாதாரண தொழிலாளர்கள், அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கு இருப்பை சரிபார்க்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் ஒருநாளுக் கான கூலியை இழக்க வேண்டிய சூழல் உருவாகிறது. தங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்கக் கூட தங்கள் தினசரி ஊதியத்தை தியாகம்  செய்ய வேண்டியிருந்தவர்களின் நிலைமைகள் கொடுமையானது என்பதை உணர்ந்து, அன்றாட வாழ்க்கையில் தேவையான அடிப்படை டிஜிட்டல்  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த கற்றுக்கொடுப்பது குறித்து அந்த பஞ்சாயத்து அதிகாரிகளையும் அரசாங்கத்தையும் இந்த காட்சிகள் சிந்திக்க வைத்தன. உடனே பஞ்சாயத்து நிர்வாகம் ‘டிஜி புள்ளம்பாறா’  (DIGITAL PULLAMBARA) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் கீழ் டிஜிட்டல் கல்வியறிவு  இல்லாதவர்களை அடையாளம் காண அனைத்து  வார்டுகளிலும் ஒரு கணக்கெடுப்பு மேற்கொள்ளப் பட்டது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 3,917 பேரில், 3,300 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது, மீதமுள்ளவர்கள் படுத்த படுக்கையாக இருந்தனர். இதன் பயிற்சிக்காக மூன்று தொகுதிகளாக பிரித்து  15 செயல்பாடுகளை வடிவமைத்தது. இப்பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் பள்ளி களின் தேசிய நலப்பணித் திட்ட (NSS) பிரிவு களைச் சேர்ந்த மாணவர்கள், குடும்பஸ்ரீ திட்ட தன்னார்வலர்கள், பட்டியலின/பழங்குடியின  அமைப்பின் தன்னார்வலர்கள் மற்றும் நூலக ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் இதில் பணியாற்ற தன்னார்வலர்களாக முன்வர கையெழுத்திட்டனர். நூறுநாள் வேலை செய்யும் பணியிடங்கள் மற்றும் குடும்பஸ்ரீ குழுக்கள் செயல்படும் இடங்களில் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் ஒன்றிணைந்திருப்பதால் அந்த இடங்கள் அப்படியே டிஜிட்டல் கல்வியை போதிக்கும் வகுப்பறைகளாகவும் மாறின. வீடு களுக்குச் செல்லும் தன்னார்வலர்களைக் கொண்டும்; மூத்த குடிமக்கள் உள்ள வீடுகளில் இளைய தலை முறையினர் மூலமாகவும் பயிற்சி அளித்தனர். பயிற்சிக்குப் பிறகு, தன்னார்வலர்கள் ஒவ்வொரு பயிற்சியாளரையும் மதிப்பீடு செய்தனர், அவர்கள் தேர்ச்சி பெற 15 பணிகளில் குறைந்தது ஆறு பணி களை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற இலக்கை வைத்து கற்றுக்கொடுக்கப்பட்டது. இதில்  புள்ளம்பாறை பஞ்சாயத்தில் மட்டும் 96.18% பயிற்சி யாளர்கள் இந்த மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சற்று பின் தங்கியவர்களுக்கு மறு பயிற்சி அளிக்கப்பட்டது.  செப்டம்பர் 2022 இல் நடந்த ஒரு அரசு நிகழ்வில்,  கேரளாவின் முதல் முழு டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற  பஞ்சாயத்தாக புள்ளம்பாறையை முதலமைச்சர் அறி வித்தார், மேலும் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் விரிந்த திட்டம்

கேரள அரசாங்கம் புள்ளம்பாறையிலிருந்து கேரள உள்ளூர் நிர்வாக நிறுவனத்திற்கு அனுபவமிக்க குழுவை அழைத்து வந்தது அவர்கள்  சுமார் 2.57  லட்சம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். தன்னார்வலர்கள் அனைவரும் களத்தில் இறங்கி இப்பணியை வெற்றிகரமாக மேற்கொண்டனர். இவ்வாறு கணக்கெடுப்பு மற்றும் பயிற்சி செயல்முறை மாநிலம் முழுவதும் முறையாக நடைபெற்றது. 1980 களின் பிற்பகுதியில் நடைபெற்ற முழு எழுத்தறிவு பிரச்சார இயக்கம் போன்றே கேரளாவில் மீண்டும்  டிஜிட்டல் கல்வியறிவு இயக்கமும் செயல்படுத்தப் பட்டது. கேரள மாநிலம் முழுவதும் 83.45 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 1.51 கோடி பேர்  இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றனர், அவர்களில் 21.88 லட்சம் பேர் டிஜிட்டல் கல்வியறிவு இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மாநில அளவில், இதனை சரிபார்க்க பொருளாதாரம் மற்றும் புள்ளி யியல் துறையால் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டது,  இதில் 21.87 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.  பின் தங்கிய பயிற்சியாளர்களுக்கு பஞ்சாயத்துகளில், மீண்டும் மறு பயிற்சி நடத்தப்பட்டது.  மாநிலம் தழுவிய கணக்கெடுப்பு உண்மை யிலேயே அனைவரையும் உள்ளடக்கிய முறையில் நடைபெற்றது. தன்னார்வலர்களுடன்  உள்ளூர் அளவிலான குடும்பஸ்ரீ உறுப்பினர்கள், உள்ளூர் தொழிலாளர்கள், குடியிருப்பாளர்கள் ஆகியோரும் உதவியதால்  ஏற்கனவே டிஜிட்டலை நன்கு பயன்படுத்த தெரிந்த வீடுகளைத் தவிர்க்க உதவிய தாக அதிகாரிகள் கூறுகின்றனர்.  தேசிய டிஜிட்டல் கல்வியறிவு இயக்கத்தின் வழிகாட்டுதல்களின்படி, 60 வயதுக்குட்பட்டவர் களுக்கு மட்டுமே பயிற்சி வழங்கினால் போதும். ஆனால் டிஜி கேரள திட்டத்தில் 100 வயதுக்கு மேற்பட்ட வர்கள் உட்பட அனைத்து வயதினரும் பயிற்சி பெற்றனர்.  தரவுகளின்படி, பயிற்சி பெற்றவர்களில் 15,221 பேர் 90 வயதுக்கு மேற்பட்டவர்கள், 7.77 லட்சம்  பேர் 60 முதல் 75 வயதுக்குட்பட்டவர்கள், 1.35 லட்சம்  பேர் 76 முதல் 90 வயதுக்குட்பட்டவர்கள். 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், 8 லட்சம்  பேர் ஆண்கள் மற்றும் 1,644 திருநங்கைகள் ஆகியோர்  இந்த பயிற்சி திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

டிஜிட்டல் கேரளா திட்டத்தின்  அடுத்தக்கட்டம் என்ன?

டிஜிட்டல் கேரளா பிரகடனத்தில், முதலமைச்சர்  டிஜி  கேரளா 2.0 திட்டத்தையும் அறிவித்தார், இதன் கீழ் இணைய மோசடி குறித்த விழிப்புணர்வு வகுப்புகள், போலிச் செய்திகளை அடையாளம் காணவும் அதை நிராகரிக்கவும் கற்றுக்கொள்ள முடியும். மாணவர்களுக்கான பாடங்கள் மற்றும் அரசாங்க சேவைகளை அணுகுவதற்கான  பயிற்சிகள் ஆகியவை தொடர்ந்து கொடுக்கப்படும். தேசிய அளவில், டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் கணினி கல்வியறிவில் கவனம் செலுத்தி வரும் சூழலில்,  புள்ளம்பாறை பஞ்சாயத்தும் கேரள மாநில அரசாங்கமும் அன்றாட வாழ்க்கையை மக்கள் வழிநடத்த ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் முறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மாநில அரசு இதை ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்கிறது, இதில் உலகளாவிய இணையதள வாய்ப்பை உறுதி செய்வதையும், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச மாக இணையத்தை வழங்குவதன் மூலம் டிஜிட்டல் சேவையில் நீடிக்கும் இடைவெளியை குறைப்பதை யும்  கேரள அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.   கேரள ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் (KERALA  FIBER OPTIC NETWORK) திட்டம் வறுமைக்  கோட்டிற்கு கீழே உள்ள 14,000  குடும்பங்களுக்கு  இது வரை இணையதள இணைப்புகள் வழங்கப்பட்டுள் ளன கூடுதலாக 74,203 குடும்பங்களுக்கு இணைப்பு கள் வணிக அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன; மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் முறையில் கிடைக்கச் செய்வதற்கான கே-ஸ்மார்ட்(K-SMART) திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக பயன்படுகிறது.

31-8-25 இந்து நாளிதழலில் வெளியானது,  தமிழில்: மோசஸ் பிரபு