headlines

img

சோகத்தில் முடிந்த சாகச நிகழ்ச்சி

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்தவர்களில் ஐந்து பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியையும், ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. 

இந்திய விமானப்படையின் ஆற்றலை எடுத் துக்காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் போர் விமானங்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டியுள்ளன. விமானப் படையின் ஆற்றல் மக்களை வியக்க வைத்துள் ளது. உலகிலேயே அதிகமான மக்கள் கூடிய நிகழ்வுகளில் ஒன்றாக இதுவும் அமைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஐந்து பேர் பலியாகி யுள்ள நிகழ்வு வேதனை தருவதாக உள்ளது.  நெரிசலில் சிக்கியும், வெப்பத்தின் காரணமாகவும் பாதிக்கப்பட்டு 93 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். 

விரிவாக விளம்பரப்படுத்தப்பட்ட இந்த சாகச நிகழ்வைக் காண 15 லட்சம் பேர் கூடிய தாக தகவல்கள் கூறுகின்றன. மாநில அரசு தரப்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த தாகவும், மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நிகழ்ச்சியை காண வருபவர்கள் குடை மற்றும் குடிநீர் கொண்டு வருமாறும், குளிர் கண்ணாடி  அணிந்து வருமாறும் விமானப் படை தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் எதிர்பார்த்த தைவிட பல மடங்கு கூட்டம் கூடியுள்ளது. பலியா னவர்கள் குடிநீர் கிடைக்காததால் நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டும், நெரிசலில் சிக்கியும் உயி ரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் கூட்டத்தில் சிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடந்தது விடுமுறை நாள் என்பதால் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் மக்கள் வந்துள்ளனர். இவ்வளவு கூட்டம் கூடும் என்று எதிர்பார்த்து அதற்குரிய வகையில் குடிநீர் உள்ளிட்ட ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்ததா என்ற கேள்வி எழுப்பப் படுகிறது. ஓரளவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் கட்டுக்கடங்காத கூட்டத்தின் தேவையை அது பூர்த்தி செய்வதாக இல்லை. 

மேலும் நிகழ்ச்சியை காண வந்தவர்கள் போக்குவரத்து வசதி போதாமையால் பெரும் அல்லலுக்கு ஆளாகியுள்ளனர். பல கிலோமீட்டர் கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில், பேருந்து சேவை இன்னமும் கூடுதலாக ஏற்பாடு செய்யப் பட்டிருக்க வேண்டும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 

எதிர்காலத்தில் மிகுந்த கவனத்தோடு, இத்த கைய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். உயிரி ழந்தோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப் பட வேண்டும். ஒவ்வொரு மனித உயிரும் விலை மதிப்பற்றது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.