headlines

img

மாநிலங்களின் உரிமைகள் வெட்கக்கேடான முறையில் மீறல்... பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

மத்திய அரசு, பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டுத் தொகையை, மாநில அரசுகளுக்குக் கொடுக்க மறுப்பது, சட்டவிரோதமானதும், மத்திய மாநிலங்களுக்கு இடையேயான உறவுகள் சம்பந்தமான அரசமைப்புச்சட்ட விதிகளை மீறும் செயலுமாகும். நிதியமைச்சர், நிர்மலா சீத்தாராமன், ஆகஸ்ட்27 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்,  செஸ் தொகையை வசூலிப்பதிலும், அரசுக்கு வரவேண்டிய வருவாய் தொகையிலும் பெரிய அளவிற்கு வீழ்ச்சி இருந்ததால், மத்திய அரசாங்கம் 2020-21இல் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை அளிக்க முடியாத நிலையில் இருந்ததாக அறிவித்தார்.

நிதியமைச்சரின் கூற்றின்படி, மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய இழப்பீட்டுத் தொகை சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் என்கிற அதே சமயத்தில், மத்திய அரசால் வசூலிக்கப்பட்டுள்ள செஸ் தொகைவெறும் 65 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமேயாகும்.   2.35 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறைஏற்பட்டிருக்கிறது. நிதியமைச்சர்  வரி வருவாயில் ஏற்பட்டிருக்கிற நெருக்கடியை, “கடவுளின் செயல்” என்று வர்ணித்து, இதன்மூலம் மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்களுக்கு நிறைவேற்றிய பொறுப்புகளிலிருந்து தன் கைகளைக் கழுவிக்கொண்டிருக்கிறார்.

ஜிஎஸ்டி திட்டம் கொண்டுவந்தசமயத்தில், மத்திய அரசாங்கம், ஆண்டுதோறும் மாநில அரசாங்கங்களின் வருவாயில் திட்டமிடப்பட்டுள்ள 14 சதவீத வளர்ச்சியில் ஏதேனும்பற்றாக்குறை ஏற்படுமானால், அந்த இழப்பீட்டுத் தொகை 2017 ஆம் நிதியாண்டிலிருந்து அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு முழுமையாக வழங்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தது. இந்த உறுதிமொழி, இதற்கான ஷரத்தை உள்ளடக்கியிருக்கிற 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி (மாநிலங்களுக்கான இழப்பீடு) சட்டத்திலும் பிரதிபலித்திருக்கிறது. வரிகளை வசூலிப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமையைக் கைவிடுவதற்குத் தயங்கிய மாநில அரசுகளை சம்மதிக்கவைத்திட இப்படி செய்யப்பட்டது.

 ஜிஎஸ்டி தொகை வசூலாகாதது “கடவுளின் செயல்” என்று கூறுவதோ அல்லது மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை நிறைவேற்றாததற்கு சாக்குப்போக்கு சொல்வதோ, பொருத்தமற்றதும், இதற்குப் பொருந்தாததுமாகும். ஏனெனில், இது மத்திய அரசுக்கும் மாநிலஅரசாங்கங்களுக்கும் இடையே வரி வருவாய்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாகசெய்துகொள்ளப்பட்டுள்ள அரசமைப்புச்சட்ட ஏற்பாட்டின் ஒரு பகுதியாகும். மேலும், நிதியமைச்சர் 2019-20ஆம் ஆண்டான முந்தையஆண்டிலும்கூட, இவ்வாறு செஸ் வசூலில் பற்றாக்குறை இருந்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார். நிதியமைச்சகத்தின் கூற்றின்படி, வசூலாகியிருக்கிற தொகை என்பது வெறும் 95,500 கோடி ரூபாயாக இருக்கும் அதே சமயத்தில், மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய இழப்பீட்டுத்தொகை 1.65 லட்சம் கோடி ரூபாயாகும்.  கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே, நாட்டில் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்லத்தொடங்கிவிட்டது  தான் ஜிஎஸ்டி வருவாய்கள்மற்றும் இழப்பீட்டு செஸ் தொகைகள் வசூலில்தேக்கநிலை அல்லது வீழ்ச்சி ஏற்பட்டதற்குக் காரணங்களாகும்.

மத்திய அரசு, தான் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றாது கைகழுவிய பின்னர், மாநிலங்கள் தங்கள் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்குக் கடன் வாங்குவதுதொடர்பாக இருவிதமான ஆலோசனை களை வழங்கியிருக்கிறது. இவ்விரு ஆலோசனைகளுமே அநீதியானதும், மாநிலங்களைஅதீதமான வட்டித்தொகைகளுடன் கடன்வலையில் தள்ளக்கூடியவைகளு மாகும்.மாநில அரசுகள் தங்களுக்கு சட்டப்படி வரவேண்டிய இழப்பீட்டுத்தொகைகளை பெறாதது மட்டுமல்லாமல்,  தங்களைக் கடன்வலையில் தள்ளிவிடுவது, அவைகளுக்கு எதிர்காலத்தில் அக் கடன்களுக்கான சேவைக் கட்டணத்தைச் செலுத்துவதைப் பெருஞ்சுமையாக மாற்றிவிடும்.மாநில அரசுகள் கொரோனா வைரஸ்தொற்றால் ஏற்பட்டுள்ள நிலைமைகளைச்சமாளிப்பதற்காக முன்னணியில் நின்று கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கக் கூடிய நிலையில், அவற்றுக்காக சுகாதாரம்மற்றும் நலத்திட்டங்களுக்காக பெரியஅளவில் செலவு செய்துகொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகையைக்கூட அளிக்கமுடியாது என்று மத்திய அரசு நிலை எடுத்திருப்பது மிகவும்அதிர்ச்சியை அளித்திருக்கிறது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை கேரளாவில் ஏற்பட்டுள்ள நிலை மூலம் நன்கு சித்தரித்திட முடியும்.

கேரளாவிற்கு மட்டும் இழப்பு  16 ஆயிரம் கோடி ரூபாய்
நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், அதாவது ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 முடிய, கேரளாவிற்கு வரவேண்டியஇழப்பீட்டுத் தொகை 7,100 கோடி ரூபாயாகும்.இந்த ஆண்டில் மீதமுள்ள காலத்திற்கும் மத்திய அரசு இத்தொகையை கொடுக்காமல் கைகழுவுமானால், பின்னர் இதன்காரணமாக கேரள மாநிலம் 16 ஆயிரம் கோடி ரூபாயைஇழக்க வேண்டியிருக்கும். இது, கேரள அரசு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகஎடுத்துவரும் நடவடிக்கைகளை சமாளிப்பதில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கக்கூடிய இக்கால கட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் மற்றும்நலத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வ தில் மிகுந்த சிரமங்களை உருவாக்கிடும்.

மத்திய அரசே, இந்திய ரிசர்வ் வங்கியிட மிருந்து கடன் வாங்கிட வேண்டும்இதற்கு ஒரே வழி, மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய தொகைகளுக்காக, மத்திய அரசு கடன் வாங்கி, மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்குவதேயாகும். மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து, குறைந்தவட்டியில் கடன் பெற்று, வழங்கிட வேண்டும். எப்படி இந்திய ரிசர்வ் வங்கி, ரெபோ விகிதம் (repo rate) நிர்ணயித்து வங்கிகளுக்குக் கடன் வழங்குகிறதோ, அதே போன்று இத்தொகையையும் வழங்கிட வேண்டும். மாநில அரசாங்கங்களில் பல இதைத்தான் விரும்புகின்றன. ஏற்கனவே, ஆறு மாநில அரசாங்கங்கள் இதுதொடர்பாக, மத்திய அரசுக்குஎழுதியிருக்கின்றன. அவை மத்தியஅரசு முன்மொழிந்த இருவிதமான ஆலோசனைகளையும் நிராகரித்திருப்பதுடன், மேலே கூறியவாறு மத்திய அரசே, இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கி, தங்களுக்கு அளித்திட வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரியிருக்கின்றன. 

ஜிஎஸ்டி அமைப்பு - மறுபரிசீலனை தேவை
ஜிஎஸ்டி அமைப்பு முறை குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியதும் இப்போது அவசியமாகும். இதனை அமல்படுத்தத் தொடங்கியபின், கடந்த மூன்று ஆண்டுகளில், ஜிஎஸ்டி மூலமாக, மத்திய அரசு எதிர்பார்த்த அளவிற்கு வருவாயை அதிகரித்திட இயலவில்லை. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காலத்திற்கு முன்பாகவேகூட, பொருளாதாரத்தில் கடும் நெருக்கடி என்பதன் பொருள் ஜிஎஸ்டியால் வருவாயை ஈட்டுவதில் தேக்கநிலை மற்றும்பற்றாக்குறை என்பதுமாகும். இது மாநிலங்களை மட்டுமல்ல, மத்திய அரசையும் பாதித்திருக்கிறது. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றும், கடும் பொருளாதார மந்தநிலையும் மாநிலங்களை, தங்கள் வரி வசூல் உரிமைகளை மத்திய அரசிடம் சரண் செய்ததற்குப்பின்னர், கடுமையான முறையில் கையறு நிலைக்குத் தள்ளி இருக்கின்றன.  “ஒரே நாடு, ஒரே வரி” என்னும் மத்திய அரசுக்கும், நரேந்திர மோடிக்கும் மிகவும் பிடித்தமான முழக்கம் என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஒன்றாகும். இது, பல்வேறு முனைகளிலும் மாநிலங்களின் உரிமைகளை அரித்துக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கத்தின் மத்தியத்துவப் படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியேயாகும். 

ஜிஎஸ்டி, மத்திய அரசின்  நிதி எதேச்சதிகாரத்தையே வலுப்படுத்தி, மாநில அரசுகளைபிச்சைக்காரர்கள் போன்று யாசிக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இவை அனைத்தும் ஜிஎஸ்டி முறையை முற்றிலுமாக பழுதுபார்த்திட வேண்டும், அல்லது, முற்றிலுமாக மாற்றியமைத்திட வேண்டும் என்கிற தேவையை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

செப்டம்பர் 2, 2020  -  தமிழில்: ச.வீரமணி