2024ஆம் ஆண்டு விடை பெற்று 2025ஆம் ஆண்டு பிறக்கிறது. ஆண்டுக்கணக்கு என்பது காலண்டர் கணக்கே என்ற போதும் ஒவ்வொரு புத்தாண்டும் புதிய புதிய நம்பிக்கைகளையும், வாய்ப்புகளையும் சுமந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் பூக்கும் புத்தாண்டை வரவேற் போம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற, சமத்துவ உலகைச் சமைத்திட இந்த புத்தாண்டு தினத்தில் உறுதியேற்போம்.
பூமிப் பந்தில் இரு முனைகளில் யுத்தத்தின் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. குறிப் பாக இஸ்ரேல் இனவெறி அரசு அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகளின் துணையோடு பாலஸ்தீன மக்கள் மீது தொடுத்து வரும் மனிதத் தன்மையற்ற தாக்குதல் தொடர்கிறது. இந்த தாக்கு தலில் பாலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையே கேள்விக் குறியாக மாறியிருப்பதோடு, பெண்கள், குழந்தை கள் படும் துயரம் பதைபதைக்கச் செய்கிறது. இஸ்ரேலின் அடாவடி, ஆக்கிரமிப்பு, அநாகரிகப் போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி உலக மக்களின் பெரும் குரல் இந்தாண்டில் ஓங்கி ஒலிக்கட்டும்.
உக்ரைன், ரஷ்யாவுக்கு இடையிலான முடி வுக்கு வராத மோதல் என்பது உண்மையில் முந் தைய பனிப்போரின் படலமே ஆகும். உக்ரை னுக்கு உதவுவதாக கூறிக்கொண்டு அமெரிக்கா வும், அதன் கூட்டாளி நாடுகளும் இந்தப் போரை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த மோதலும் முடிவுக்கு வருவது அவசியமாகும்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடைந் தெடுத்த வலதுசாரியான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றிருப்பது கவலையின் கனத்தை அதி கப்படுத்துகிறது. நவீன தாராளமய பொருளாதா ரக் கொள்கையை பின்பற்றும் நாடுகளில் மக்களி டையே ஏற்படும் அதிருப்தியை அதிதீவிர வலது சாரிகளே அறுவடை செய்கிறார்கள். இலங்கை போன்று இடதுசாரிகள் பலம் பெறுகிறபோதுதான் நம்பிக்கையான மாறுதல் உருவாகும். அதிதீவிர வலதுசாரிகள் ஆங்காங்கே அதிகாரத்தை கைப் பற்றினாலும், மக்கள் சீனம், கியூபா, வடகொரி யா, வியட்நாம் போன்ற சோசலிச நாடுகளின் நீடித்த வளர்ச்சியும், உலகின் பல்வேறு பகுதிகளில் இடது சாரிகள் ஆட்சியதிகாரத்தை கைக்கொள்வதும், பிற்போக்குக் கொள்கைகளுக்கு எதிரான தொழி லாளர் வர்க்கப் போராட்டங்கள் வெப்ப வீச்சுடன் வெடிப்பதும் நம்பிக்கை அளிக்கிறது.
இந்தியாவில் கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் பாஜக கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றபோதும், ஆர்எஸ்எஸ்- கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை முன்னெ டுப்பதில் மோடி அரசு உறுதி காட்டுகிறது. இதன் ஒரு பகுதியே ஒரே நாடு, ஒரே தேர்தல் போன்ற ஜன நாயகத்தின் ஆரக்கால்களை அகற்றும் திட்டமா கும். ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமை கள், மொழி சமத்துவம் போன்ற விழுமியங்களை பாதுகாக்கவும், மதவெறி, தீண்டாமை உள்ளிட்ட சாதியக் கொடுமைகள், பெண்ணடிமைத்தனம் போன்ற பிற்போக்குத்தனங்களை பின்னுக்குத் தள்ளவும் போராட்டங்களை அயராமல் நடத்தும் ஆண்டாக இந்த ஆண்டும் அமையட்டும்.