கிருஷ்ணகிரி அருகே 8ஆம் வகுப்பு மாணவி (13 வயது) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ஒரு மாதமாக பள்ளிக்கு வராததால், பள்ளியின் தலைமை ஆசிரியை மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போது, அதே பள்ளியின் ஆசிரியர்களான சின்னசாமி (57), ஆறுமுகம் (48) மற்றும் பிரகாஷ் (37) ஆகிய 3 பேரும் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதில் கருத்தரித்து கரு கலைப்பு செய்ததாகவும் மாணவி தெரிவித்தார். இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மாணவியிடம் விசாரணை மேற்கொண்டு குழந்தைகள் நல பாதுகாப்பு மைய அலுவலர், இச்சம்பவம் தொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதை அடுத்து, ஆசிரியர்கள் 3 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, 3 பேரையும் இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.